நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தரவுகளை வெளியிட்ட குற்றத்துக்காக பாண்டான் எம்பி ரபிசி ரம்லிக்கும் பப்ளிக் பேங்க் முன்னாள் அலுவலர் ஜொஹாரி முகம்மட்டுக்கும் 30மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் வங்கி, நிதிக்கழகச் சட்ட(Bafia)த்தை மீறியது நிரூபிக்கப்பட்டிருப்பதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜம்ரி பக்கார் கூறினார்.
“குற்றச்சாட்டு பொய்யெனக் காட்ட எதிர்த்தரப்பு தவறிவிட்டது. அந்த வகையில் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது”, என நீதிபதி கூறினார்.
மேல்முறையீட்டுக்காக தண்டனையை நிறுத்தி வைக்கவும் அவர் இசைந்தார்.
ரபிசியும் ஜொஹாரியும், 2012இல் என்எப்சி மற்றும் அதன் தலைவரும் அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலிலின் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட்டார்கள் என்பதாக Bafia பிரிவு 97-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இச்சட்டம் 2013-இல் மீட்டுக்கொள்ளப்பட்டது, என்றாலும் ரபிசிமீதான குற்றச்சாட்டு இன்னும் உள்ளது.