முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார் என அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் நம்புகிறார்.
காலிட்டைச் “கைச்சுத்தமானவர்” என்று வருணித்த ஹாடி, அவர் சிலாங்கூர் மந்திரி புசாராக இருந்தபோது அவருக்கும் பாஸுக்கும் நல்லுறவு நிலவியதாகக் கூறினார்.
“அவர் பாஸ் உறுப்பினர் அல்ல என்றாலும் பாஸுக்கு உதவியாக இருந்தார்”, என ஹாடி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பண்டார் துன் ரசாக் எம்பியும் போர்ட் கிளாங் சட்டமன்ற உறுப்பினருமான காலிட் ஒரு மரியாதைக்குரிய மனிதர் என்றாரவர்.
கடந்த வாரம் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி பேசுகையில், காலிட் எந்தக் கட்சியிடம் பற்று என்பதை உடனே முடிவு செய்ய வேண்டும் என்றார். அவரது மனம் பாஸ், அம்னோ, சுயேச்சை என ஊசலாடிக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கு காலிட், விரும்புவோருக்கு ஆதரவளிப்பது தம்முடைய உரிமை என்றும் ஆனால் அவர்களில் அஸ்மின் ஒருவரல்ல என்றும் பதிலடி கொடுத்தார்.