அண்மைய மாதங்களில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் மதிப்பு உயர்ந்து வருவது குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பெருமை கொள்ள எதுவுமில்லை என்கிறார் டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா.
கடந்த பொதுத் தேர்தல் முடிந்த வேளையில் ரிங்கிட் பரிவர்த்தனை ஒரு டாலருக்கு ரிம2.98 என்றிருந்தது, இப்போது ஒரு டாலருக்கு ரிம3.90.
“அவரது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் ரிங்கிட் கிட்டத்தட்ட 31விழுக்காடு மதிப்புக் குறைந்துள்ளது.
“நிதி அமைச்சரும் பிரதமருமாக இருப்பவர் ஐந்தாண்டுக்கால பொருளாதாரச் செயல்பாட்டை அல்லாமல் கடந்த மூன்று மாதங்களை மட்டும் வைத்து தம்மை மதிப்பிடுவது கேலிக்குரியது”, என புவா ஓர் அறிக்கையில் கூறினார்.
நஜிப் கடந்த திங்கள்கிழமை பிரதமர்துறை மாதாந்திரக் கூட்டத்தில் உரை நிகழ்த்தியபோது ரிங்கிட் உலகில் சிறப்பாக செயல்படும் நாணயங்களில் ஒன்று என்றும் டாலருக்கு ரிம4 என்ற நிலையிலிருந்து அது கீழ் இறங்கி வந்திருப்பதாகவும் குறிப்பிட்டதற்கு எதிர்வினையாக புவா அவ்வாறு கூறினார்.
எண்ணெய் விலை உயர்ந்து வருவதும் மலேசியக் கொள்கைகள்மீது முதலீட்டாளர் நம்பிக்கை பெருகியிருப்பதும்தான் இதற்குக் காரணம் என்று நஜிப் குறிப்பிட்டார்.
ஆனால், புவா 2015-இல் 1எம்டிபி ஊழல் தலைப்புச் செய்திகளாக இடம்பெறத் தொடங்கியபோதுதான் ரிங்கிட்டின் சரிவு தொடங்கியது என்றார்.
“2015-இல் மிக மோசமான நிதி அமைச்சர் என்று கூட முத்திரை குத்தப்பட்ட நம் பிரதமர் அண்மைய மாதங்களில் ரிங்கிட் கண்ட சிறிய முன்னேற்றத்தை வைத்து பெருமை கொள்ளலாகாது. கடந்த ஐந்தாண்டுகளில் ரிங்கிட்டின் வீழ்ச்சிக்குக் காரணமே அவர்தான்”, என்றார்.