ஆசிரியர்கள் பள்ளிக்குக் கைத்தொலைபேசிகளைக் கொண்டுவரலாம் என்று துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் இன்று விளக்கமளித்துள்ளார்.
இது, நேற்று உத்துசான் மலேசியா வெளியிட்ட, ஆசிரியர்கள் கைப்பேசிகளை வகுப்பறைகளுக்குக் கொண்டு வரவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது, ஆசிரியர் அறையிலோ அல்லது அலுவலகத்திலோ வைத்து செல்லலாம் என்ற அறிக்கைக்கு நேர்மாறாக உள்ளது.
இன்று கமலநாதன் தனது அறிக்கையில், ஆசிரியர்கள் கைப்பேசிகளைத் தனிப்பட்ட விவகாரங்களுக்குப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்றும், அதன் பயன்பாடு, கற்றல் கற்பித்தல் செயல்முறைகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும் கூறினார்.
“21-ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் கற்பித்தலுக்கு உதவியாக ஆசிரியர்கள் அச்சாதனங்களைப் பயன்படுத்தலாம்,” என்றும் அவர் கூறினார்.
அந்தத் ‘தடை’, கல்வி அமைச்சின் ஒரு நடைமுறையென உத்துசான் செய்தி வெளியிட்டிருந்தது.
இன்று, தேசிய ஆசிரியர் சேவை சங்கம் (என்.யு.தி.பி.), உத்துசான் வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கமளிக்குமாறு கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டது.
இன்றைய 21-ம் நூற்றாண்டு கல்வி யுகம் மற்றும் பெரும்பான்மையான போதனாக் கருவிகள், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்குக் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஹேரி தான் கூறினார்.
அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறை கற்பித்தலை மேம்படுத்த, அரசாங்கமே ‘யெஸ்’ கைப்பேசிகளை விநியோகித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று ஆசிரியர் தொடர்ந்து அலைபேசியில் தோய்ந்து உள்ளனர். இது வகுப்பில் பாடம் நடக்கும் நேரத்திலும் நடந்தால் அப்புறம் அவர் வாங்குவது ‘Gaji Buta’ – வா?