போலிச் செய்திகளை ஒடுக்குவது ஒரு சரியான நடவடிக்கைதான் என்று கூறும் அமனா எம்பி ஹனிபா மைடின், இந்நாட்டில் “உண்மைச் செய்திகளைச் சொல்வதுதான்” ஆபத்தாக முடிந்து விடுகிறது என்கிறார்.
“போலிச் செய்திகளை ஒடுக்குவது நல்லதுதான். ஆனால், இந்நாட்டைப் பொருத்தவரை சரியான செய்திகளைச் சொல்வோர்தான் பாதிக்கப்படுகிறார்கள்”, என அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை ஆராய சிற்ப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருப்பது குறித்து செப்பாங் எம்பி கருத்துரைத்தார்.
பாண்டான் எம்பி ரபிசி ரம்லிக்கு நேசனல் பீட்லோட் கார்ப்பரெஷன் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கசியவிட்டதற்காக 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“என் நண்பர் பாண்டான் எம்பியின் வழக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு. சரியான செய்தியைச் சொன்னதற்காக அவருக்கு 30 ஆண்டு தண்டனை கிடைத்தது.
“அச்சரியான செய்தியில் சம்பந்தப்பட்டவரோ வெளியில் சுதந்திரமாக திரிகிறார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட அவர் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்”, என்றார்.
உண்மையைச் சொன்னால் “தண்டிக்க” தேசநிந்தனைச் சட்டம், அதிகாரத்துவ இரகசியங்கள் சட்டம் போன்றவை இருப்பதாக அவர் வருத்தப்பட்டுக் கொண்டார்.
“இச்சட்டங்களில், உண்மை உங்களைத் தற்காக்க உதவாது. நாடாளுமன்றத்தில்கூட 1எம்டிபி போன்ற விவகாரங்களில் உண்மை நிலவரத்தைப் பேச முடிவதில்லை.
“என்றால், நாட்டுக்கு எதிரி போலிச் செய்திகளா உண்மைச் செய்திகளா?”, என்று ஹனிபா வினவினார்.