பெர்சத்துவின் ஆண்டுக் கூட்டம்(ஏஜிஎம்) நடத்தப்பட்ட முறை குறித்து கட்சி உறுப்பினர்கள் பலர் ஆட்சேபனை தெரிவித்திருப்பதால் சங்கப் பதிவகம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது எனத் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
விசாரணையில் பல ஆவணங்களைப் பார்வையிட வேண்டியிருக்கும் என்பதால் அது முடிவடைய சிறிது காலம் பிடிக்கும் என்றாலும் விசாரணையை முடுக்கி விடுமாறு ஆர்ஓஎஸ்ஸுக்குக் கூறப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
பெர்சத்து உறுப்பினர்கள் ஆர்ஓஎஸ் விசாரணையை விரைந்து நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பது குறித்து ஜாஹிட் கருத்துரைத்தார்.
டிசம்பர் 30-இல் நடந்த ஏஜிஎம் சட்டவிரோதமானது, கட்சி அமைப்பு விதிகளை மீறியது என்று பலரும் புகார் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் 1999 பிபிபிஎம் உறுப்பினர்கள் ஆர்ஓஎஸ் தலைமையகத்தில் கூடி எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று முன்னாள் பெர்சத்து செயல்குழு உறுப்பினர் முகம்மட் தவிக் அபாஸ் நேற்று கூறியிருந்தார்.
இரண்டு வாரங்களில் விசாரணை முடிந்து விடுமா என்று வினவியதற்கு, “அதை அவர்களிடமே விட்டு விடுவேன். அவர்களின் (ஆர்ஓஎஸ்) நடவடிக்கைகளில் நான் தலையிடுவதில்லை”, என ஜாஹிட் கூறினார்.