கிளந்தான் அரண்மனை, மகாதிரின் பதக்கங்களையும் திரும்பப் பெற்றது

அமானாவின் இரண்டு மூத்தத் தலைவர்களின் பதக்கங்களைத் திரும்பப் பெற்ற ஒருநாளுக்குப் பின்னர், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் கௌரவப் பதக்கங்களையும் கிளந்தான் அரண்மனை திரும்பப் பெற்றது.

இன்று, கடிதம் வாயிலாக, கிளாந்தான் அரண்மனை அச்செய்தியை மகாதிர் தரப்பினருக்கு அறிவித்தது. பிப்ரவரி 6-ம் தேடியிட்ட அக்கடிதம், இன்று ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள மகாதீரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு, அப்போதைய சுல்தானும், இன்றைய சுல்தான், சுல்தான் முகமட்  5-ன் தந்தையுமான சுல்தான் இஸ்மாயில் பெட்ரா அக்கௌரவப் பட்டத்தை மகாதிருக்கு அளித்தார்.

மகாதிர் அப்பதக்கங்களைத் திருப்பி சமர்ப்பிக்கும் பணியில் தற்போது இருக்கிறார் என்று ஆதாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.

நேற்று, அமானா தலைவர்கள் ஹுசாம் முசா மற்றும் வான் அப்துல் ரஹிம் இருவரின் ‘டத்தோ’ பட்டங்களையும் கிளாந்தான் அரண்மனை பறித்துகொண்டதை மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

எப்படியாயினும், கொடுத்த கௌரவப் பதக்கங்களைத் திரும்பப் பெறுவது கிளாந்தான் அரன்மனைக்கு ஒன்றும் புதிதல்ல.

இதற்கு முன்னர், 2010-ம் ஆண்டு குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்ஷா மற்றும் பெர்காசா தலைவர் இப்ராஹிம் அலியின் கௌரவப் பதக்கங்களை கிளாந்தான் சுல்தான் திரும்பப்பெற்றுள்ளார்.