டச்சு மாடல் அழகி இவானா எஸ்தர் ரோபர்ட் ஸ்மித்தின் கடைசித் தருணங்களைக் காண்பிக்கும் சிசிடிவி காணொளி ஒரு “சூழ்நிலைச் சான்று” மட்டுமே என்று கூறிய போலீஸ், வெளித் தரப்புகள் அவரது இறப்புமீதான போலீஸ் விசாரணையில் குறுக்கிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
அவ்வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் போலீஸ் நுணுகி ஆராய்ந்து வருவதாகவும் அந்த 19-வயது பெண்ணின் மரணம் குறித்து அவசரப்பட்டு எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது என கோலாலும்பூர் போலீஸ் தலைவர் மஸ்லான் லாஸிம் கேட்டுக்கொண்டதாகவும் த ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
“நாங்கள் நிபுணத்துவத்துடன் விசாரணை நடத்தி வருகிறோம். மேல்நடவடிக்கை எடுப்பதற்குமுன் மேலும் சில அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறோம்”, என்று மஸ்லான் கூறினார்.
புதன்கிழமை ஸ்மித் குடும்பத்தின் டச்சு வழக்குரைஞர் செபாஸ் திக்ஷ்ரா, காணொளி ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அக்காணொளி ஒர் “அமெரிக்க ஆடவர்” ஸ்மித்தைத் தூக்கிக்கொண்டு மின்தூக்கிக்குள் செல்வதைக் காண்பிப்பதாக திக்ஷ்ரா கூறினார்.
ஸ்மித் கோலாலும்பூரில், டாங் வாங்கி கொண்டோமினியத்தில் 20வது மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
ஸ்மித்தின் இறப்பைத் “திடீர் மரணம்” என்று போலீசார் வகைப்படுத்தி இருந்தனர். ஆனால், அவரின் குடும்பத்தார் அவரது மரணம் குறித்து சந்தேகம் கொள்வதாகக் கூறியதை அடுத்து போலீசார் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.