ஒரு ஊழல் விவகாரம் தொடர்பான தகவல்களை வெளியிட்டதற்காக பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கு 30 மாதச் சிறை விதிக்கப்பட்டிருப்பது நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்ற வேண்டும் என்பதைக் காண்பிப்பதாக சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
“சிலாங்கூர், பினாங்கு அரசுத் தலைவர்கள் உள்பட எதிரணித் தலைவர்கள் குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர்.
“அதிலும் அமைச்சர் ஒருவரின் குடும்பத்தார் நிதியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தை (நேசனல் பீட்லோட் திட்டம்) அம்பலப்படுத்தியதற்காக இளம் ரபிசி ரம்லிமீது நடவடிக்கை எடுக்கப்பட்டது வெட்கப்பட வேண்டிய செயல்.
“ஊழல்கள் எங்கு நிகழ்ந்தாலும் விசாரிப்பதாக எம்ஏசிசி பெருமையடித்துக்கொள்ளும். ஆனால், மாடுகள் வழக்கில் எல்லாமே மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.
“இதற்குமுன் (பிகேஆர் உதவித் தலைவர்) தியான் சுவாவும் இதேபோன்றுதான் அதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளானார்”, என அன்வார் இன்று அவரது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார்.