பயனீட்டாளர்களின் செலவினம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, இந்த ஆண்டு ஐந்து முதல் ஆறு விழுக்காடு அதிகரிக்கும் என இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் காணி தெரிவித்தார்.
இந்த ஆண்டு, மலேசியப் பொருளாதாரம் 5 முதல் 5.5 விழுக்காடு வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
2018 வரவு செலவுத் திட்டத்தில், தனிநபர் வருமான வரி விகிதத்தை 2% குறைக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, செலவழிக்கத்தக்க வருமானத்தின் அதிகரிப்பு பயனீட்டாளர்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
“40% நடுத்தரக் குழுவினருக்கு, செலவழிக்கத்தக்க வருவாய் அதிகரிக்கும்,” என்று இன்று, சிறிய மற்றும் நடுத்தர நிறுவன கடன்கள் / நிதியளிப்பு குறிப்பு தளத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரிங்கிட்டின் மதிப்பு வலிமையாகி இருப்பது குறித்து பேசிய அவர், “ஏற்றுமதி, வர்த்தகம், எண்ணெய் விலை உயர்வு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு ஆகியவை உட்பட, பொருளாதாரத்தின் அடிப்படைகள் மேம்படுத்தப்பட்டு வருவதை இது நிரூபித்துள்ளது,” என்றார்.
-பெர்னாமா