பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் நாளை பெந்தோங்கிற்கு வருகையளிக்க இருந்தார். அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய ஆலோசனைப்படி அவரது வருகை தள்ளிப்போடப்பட்டுள்ளது.
பெர்சத்துவின் பெந்தோங் தொகுதி இன்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில் மகாதிர் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால் அவர் இங்கு கூடிய விரைவில் வருகையளிக்க உறுதியளித்துள்ளார் என்று கூறுகிறது.
நாளை மாலையில் பெந்தோங்கிலும் அதன் பின்னர் மெம்பாகா பெல்டா குடியிருப்பில் ஒரு செராமாவுக்கும் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் மசீச தலைவர் லியோ தியோங் லாய். சீனாவுடனான வர்த்தக உறவுகள் பற்றிய மகாதிரின் கருத்துகளை கடுமையாகச் சாடியுள்ளார்.
2013 ஆண்டில், லியோ அத்தொகுதியை டிஎபி வோங் டாக்கிற்கு எதிராக வெறும் 319 வாக்குகள் வித்தியாசத்தில் தக்கவைத்துக் கொண்டார்.