அரசாங்கம் போலிச் செய்திகளை ஒடுக்கும் சட்டத்தைக் கொண்டு வருவது பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல என்கிறார் மசீச தலைவர் லியோ தியோங் லாய்.
பேச்சுரிமையைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது நாட்டின் நல்லிணக்கத்தையும் வளப்பத்தையும் கெடுத்து விடும் என்றாரவர்.
“ நாட்டில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் மேம்பாடும் தொடர்வதை உறுதிப்படுத்த நம் தலைவர்கள் பாடுபட்டு வந்திருக்கும் வேளையில் பொறுப்பற்றவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும் விவகாரங்களை மிகைப்படுத்தவும் போலிச் செய்திகளைப் பரப்பவும் அனுமதிப்போமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல”, என்று லியோ கூறினார்.
லியோ நேற்று துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.