இசா சமட்டிடம் அவர் பெல்டா தலைவராக இருந்த காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கோலாலும்பூர் வெர்டிகல் சிட்டி(கேஎல்விசி) திட்டம் தொடர்பில் நிலவும் சர்ச்சைகள் குறித்து வினவப்பட்டதற்கு அது தமக்குச் சம்பந்தமில்லாத விவகாரம் என்றார்.
“பெல்டாவுடன் எனக்கு இப்போது சம்பந்தமில்லை. நடப்பு பெல்டா தலைவரைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்”, என்று இசா சொன்னதாக மலாய் மொழி நாளேடான பெரித்தா ஹரியான் இன்று கூறிற்று.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பெல்டாவின் நிலக் கொள்முதல் மீதான கணக்காய்வு அறிக்கைகள் குறித்து வினவப்பட்டதற்கு, “கருத்துரைக்க விரும்பவில்லை”, என்று இசா கூறி விட்டார்.
நேற்று பிரதமர்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில், கேஎல்விசி திட்டம் மீதான கணக்காய்வில் கொள்முதல் செய்வதில் பல நடைமுறைகள் பின்பற்றப்படாததும் பெல்டாவின் நலன்கள் காக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்திருப்பதாகக் கூறியது.
கணக்காய்வு அறிக்கைகளில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை அல்லது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெல்டா பணிக்கப்பட்டிருப்பதாகவும் அது கூறியது.