திருடர்கள் கைகளில் வைரக் கேரட், சொத்தின் உரிமையாளர்களுக்கு வாயில் கேரட்டா? 

 

 

மலேசியாவின் 1எம்டிபி நிதியிலிருந்து கொள்ளையடித்த பிரதமரின் அயல் நாட்டு தோழர் ஜோலோ காதலர் தினப் பரிசாக அவர் காதலி கெர்கிற்கு (ஆஸ்திரேலிய அழகிக்கு) 50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான இதய வடிவிலான 11.72 கேரட் வைரத்தைப் பரிசளித்தார். மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக்கின் மனைவி ரோஸ்மாவும் பல கோடிகள் மதிப்புள்ள உயர்ந்த கேரட் வைர, தங்க ஆபரணங்களை மலேசியாவின் 1எம்டிபி நிதியிலிருந்து வாங்கியுள்ளதை அமெரிக்க நீதித்துறை நிரூபித்துள்ளது.

 

ஆனால், அதே காதலர் தினக் கொண்டாட்டத்தில் ம.இ.காவும் NRC என்ற இயக்கமும் மலேசிய இந்தியர்களுக்குக் கேரட்டைப் பரிசளித்திருக்கிறது. ஆனால் அவை வைரக் கேரட் அல்ல, கங்கோங், பாயாம் கீரைகளுடன் கேரட் கிழங்கைப் பரிசளித்திருப்பது ம.இ.காவின் சாதனையிலும் சாதனையாக உள்ளது.

 

ஆனால், மஇகாவின் இயலாமையைக் காண  மலேசிய இந்தியர்களுக்கு வேதனையாக உள்ளது என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

இதுதான் மலேசியாவின் அம்னோ-பாரிசானின் நீதியா? ! திருடர்களின் காதலி, மனைவி, மக்கள் கழுத்துகளுக்கும், கைகளுக்கும் வைரம், வைடுரீயம், தங்கம். அவர்களின் பிள்ளைகளுக்கு  அயல் நாடுகளில் ஆடம்பர மாடமாளிகைகள்! உழைப்பவர் கையில் ஓடு தரும் மலேசிய ஜனநாயகத் தர்மம் இதுதானா?

 

உழைத்து நாட்டை உருவாக்கிய மலேசியர்களின் வாயில் முளைக்கீரையும் கேரட்டுமா?. அவர்கள் பிள்ளைகளுக்கு வீடு கட்டிக்கொள்ள ஒரு காணி புறம்போக்கு நிலம்கூட இல்லை என்றாகி விட்டது மலேசியர்களின் நிலை என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

நாட்டின் அடுத்துப் பொதுத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடக்கவிருக்கும்  இவ்வேளையில் அம்னோ -பாரிசான் ஆட்சியின் ஒரு முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரின் தவப்புதல்வன் வழியாக நடத்தப்படும் மாபெரும் காதலர் தினப் பரிசளிப்பா இது?

 

இல்லை, மலேசிய இந்தியர்கள் கையேந்தும் இனம்! கேரட்டுக்கும், கீரைக்கும் முட்டைக்கும் விலைபோனவர்கள் என்று கேவலமாக எண்ணுகிறதா ம.இ.கா? இல்லை, அடுத்த தேர்தலுக்குப் பின் இந்நாட்டு உழைப்பாளிகளுக்கு இதுதான் மிஞ்சும் எனச் சூசகமாக உணர்த்த எத்தனிக்கிறதா ம.இ.கா எனக் கேட்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.