பேராக்கில் பி.எஸ்.எம். சிக்கலை உருவாக்குகிறது, டிஏபி குற்றச்சாட்டு

பேராக்கில், டிஏபி வசமிருக்கும் 1 நாடாளுமன்றம் மற்றும் 5 சட்டமன்றங்களில், மலேசியச் சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தனது வேட்பாளர்களை நிறுத்துவது சிக்கலை ஏற்படுத்தும் எனப் பேராக் டிஏபி குற்றம் சாட்டியுள்ளது.

பி.எஸ்.எம்., பாரிசான் மற்றும் ஹராப்பானுடன் மும்முனைப் போட்டிகளை ஏற்படுத்தி, எதிர்க்கட்சியினரின் ஓட்டுகளைப் பிரிக்கிறது என்று பேராக் டிஏபி தலைவர், ங்கா கோர் மிங் கூறினார்.

“அவர்கள் ஏன் அம்னோ/பாரிசான் வசமிருக்கும் நாற்காலிகளுக்குப் போட்டியிட வேட்பாளரை நிறுத்தவில்லை? ஆக, அவர்கள் எதிர்க்கட்சியினர் பக்கம் இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்று அவர் ஃப்.எம்.தி.-யிடம் கூறியுள்ளார்.

கடந்த வாரம், பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன், எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் பி.எஸ்.எம். 5 நாடாளுமன்றம், 12 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தது தொடர்பில், ங்கா இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

பேராக்கில், பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதியிலும், புந்தோங், ஜெலாப்பாங், மெங்கிலம்பு, துரோனோ மற்றும் மாலிம் மாவார் சட்டமன்றத் தொகுதிகளிலும் பி.எஸ்.எம். போட்டியிட உள்ளது.

நாற்காலி பகிர்வு தொடர்பாக, பேராக் டிஏபி-இடமோ அல்லது மாநில ஹராப்பான் தலைவர்களுடனோ கலந்துபேச, பி.எஸ்.எம். எந்தவொரு சந்திப்பையும் மேற்கொள்ளவில்லை என ங்கா குற்றஞ்சாட்டினார்.

“கடந்த 2008, 2013-ம் பொதுத் தேர்தல்களில் செய்த தவற்றைப் பி.எஸ்.எம். மீண்டும் செய்கிறது, அந்தத் தேர்தல்களில் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் தோல்வியுற்றனர்,” என்றார் அவர்.

கடந்த பொதுத் தேர்தலில், டிஏபி 9 நாற்காலிகளை வென்ற லெம்பா கிந்தாவில், வாக்காளர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் பி.எஸ்.எம். வேட்பாளரிடம் ஏமாறமாட்டார்கள் என்றும் அவர் சொன்னார்.

கடந்த தேர்தலில், பி.எஸ்.எம். சரஸ்வதி முத்து-ஐ ஜெலாப்பாங்கில், மும்முனைப் போட்டியில் நிறுத்தியது. அத்தொகுதியில் அவர் 2,568 வாக்குகள் மட்டுமே பெற்று, தோற்றுபோனார். டிஏபி வேட்பாளர் தே ஹொக் கே 16,921 வாக்குகள் பெற்று வென்றார் என்று அவர் தெரிவித்தார்.

“இம்முறை, பக்காத்தான் ஹராப்பான் பேராக் மற்றும் புத்ராஜெயாவைக் கைப்பற்ற போட்டியிடவுள்ளது,” என்றார் அவர்.

பி.எஸ்.எம். தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, அவர்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அவர்களது கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளனர் என்று ங்கா கூறினார்.

“பேராக்கில் மொத்த 59 சட்டமன்றத் தொகுதிகளில், 5 ஆபத்தான தொகுதிகளில் போட்டியிடும் அவர்கள், வெற்றி பெற்று எப்படி மக்களுக்குச் சேவையாற்ற உள்ளனர்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஹராப்பான் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும், நாற்காலி பகிர்வுக்கானப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் ங்கா தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் 10-ல் நடக்கவிருக்கும் மாநில மாநாட்டில், வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.