எம்.ஏ.சி.சி. : அரசு ஊழியர்கள் இலஞ்ச ஊழலை அறிவிக்க வேண்டும்

அரசு ஊழியர்கள், இலஞ்சம் கொடுக்கும், வாங்கும் சம்பவங்களைப் புகார் செய்ய முன்வர வேண்டும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) கேட்டுக்கொண்டுள்ளது.

எம்ஏசிசி சமூகக் கல்வி பிரிவு இயக்குநர், அப்துல் சமாட் காசா, இந்நடவடிக்கையால் ஊழல்களைத் தடுக்க மட்டுமல்ல, அரசு துறை அல்லது நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் அதிகரிக்க முடியும் என்று கூறினார்.

“ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாகப் புகாரளிக்க விரும்பவில்லை என்ற நிலை வரக்கூடாது, காரணம் அவர்களது அடையாளம் இரகசியமாக வைக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதோடு, ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது.

“அவரவர் நிறுவனத்தைப் பாதுகாக்கும் ஒரு போராளியாக அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். இந்த முயற்சி நல்ல வரவேற்பைப் பெற்றால், இலஞ்சம் வழங்க முன்வருபவருக்கும் அது பயத்தை உருவாக்கும்,” என்று அவர் கூறினார்.

இன்று, செராசில், மலேசிய மரங்களுக்கானத் தொழில் வாரியத்தின் (எம்ஐடிபி) ஊழல் ஒழிப்பு உறுதிமொழி (ஐபிஆர்) ஒப்பந்தக் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அப்துல் சமாட் கூறினார்.

-பெர்னாமா