எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14), புதிய வாக்களிப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்படாது என்று தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா கூறுகிறார்.
புத்ரா ஜெயாவில், இன்று ஓர் அறிக்கையில், ஜிஇ14-ல் மோசடிகளைத் தடுக்க ‘ஆணை விரல்’ முறையைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது என்ற நேற்றைய ஊடக அறிக்கைகள் குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
நேற்று, பஹாங் மாநில அளவில் நடந்த ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் செயற்பாடுகளின் சுருக்க செயலாக்கங்கள் விளக்கக்கூட்டத்தின் போது இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழிமுறையானது தேர்தல் ஆணையத்தின் குறிப்பிட்ட செயல்முறை அல்லது கட்டுப்பாடு அல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.
“அது உண்மையில் வாக்களிக்கும் போது போலி விரல்களைப் பயன்படுத்தி மோசடி முயற்சிகளில் ஈடுபடும் வாக்காளர்கள் கைரேகையைச் சரிபார்க்க, தேர்தல் அதிகாரிகள் பின்பற்றும் வழிகளில் ஒன்றுதான்,” என்று அவர் விளக்கினார்.
விதி 19 (13) மற்றும் 19A, தேர்தல் ஒழுங்குவிதிகள் (தேர்தல்களை நடத்துதல்) 1981-ன் படி, வாக்காளர்கள் விரல்களில் தேர்தல் மை இல்லாமல் இருப்பதை உறுதிசெய்த பின்னரே, அவர் விரலில் மை இடப்பட்டு, வாக்குச் சீட்டு வழங்கப்படும் என்று முகமது ஹாசிம் தெரிவித்தார்.
“இந்த நடைமுறை கடந்த தேர்தலின் போதே கடைபிடிக்கப்பட்ட ஒன்றாகும், ஜிஇ14-ல் இதே முறை பின்பற்றப்படும், இது புதிய நடைமுறை அல்ல,” என்றார் அவர்.