இலவச பிளாஸ்டிக் பை கொடுப்பது மடத்தனத்தின் உச்சம்: டிஏபி சாடல்

பிளாஸ்டிக்  பை  பயனீட்டைக்  குறைத்து   சுற்றுச்சூழலைப்  பாதுகாக்க  உலகம்    போராடிவரும்   வேளையில்   பிளாஸ்டிக்(நெகிழிப்)  பைகளை  இலவசமாகக்  கொடுக்க  முன்வந்திருப்பது    மடத்தனத்தின்   உச்சம்   என  லிம்  லிப்  எங்  இன்று   சாடினார்.

அண்மையில்  சிலாங்கூர்  பிஎன்    தகவல்   தலைவர்   சதிம்  டிமான்,  வரும்  தேர்தலில்  பிஎன்  சிலாங்கூர்  மாநிலத்தைக்  கைப்பற்றினால்     மாநிலத்தில்   பிகேஆர்   அரசு  நெகிழிப்  பைகளுக்கும்  பாலிஸ்ட்ரினுக்கும்  விதித்துள்ள  தடையை  அகற்றும்   எனக்  கூறியிருப்பது  குறித்துக்  கருத்துரைத்தபோது    லிம்  இவ்வாறு   கூறினார்.

இப்போதைக்கு   பொருள்கள்   வாங்கும்  பயனீட்டாளர்களுக்கு   பிளாஸ்டிக்  பைகள்  தேவை  என்றால்   ஒரு  பைக்கு  20சென்    கொடுத்து  வாங்க  வேண்டும்.

எதிரணி   ஆட்சியில்  உள்ள   சிலாங்கூர்,  பினாங்கு  மாநிலங்களில்   மட்டுமல்லாமல்   கோலாலும்பூர்,  புத்ரா  ஜெயா,  லாபுவான்   கூட்டரசுப்  பிரதேசத்திலும்   நெகிழிப்  பைகளுக்குத்   தடை   அமலில்  உள்ளதை  செகாம்புட்   எம்பி   லிம்   சுட்டிக்காட்டினார்.

“பிஎன்  பொதுத்  தேர்தல்வரை  காத்திருக்க   வேண்டியதில்லை.

“பிஎன்  தலைமைச்   செயலாளர்   தெங்கு   அட்னான்(தெங்கு  மன்சூர்)தானே   கூட்டரசுப்  பிரதேச   அமைச்சர்.  பிஎன்  தேர்தல்  கொள்கை   அறிக்கையை  அவர்  கோலாலும்பூர்,  புத்ரா  ஜெயா,  லாபுவான்   ஆகிய  இடங்களில்    உடனே  அமல்படுத்தலாம்.

“அதன்  பின்னர்  நெகிழிப்  பைகளை  விரும்பும்  பயனீட்டாளர்களைக்  கவர்ந்திழுக்க   அம்மூன்று  நகரங்களையும்   ‘பிளாஸ்டிக்  நகரங்கள்’  என்று  உலகம்  முழுவதும்  விளம்பரப்படுத்தலாம்”,  என்று   லிம்  ஓர்   அறிக்கையில்   கேலியாகக்  குறிப்பிட்டார்.