பெந்தோங்கில் போட்டியிடுவது பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை: லியோவுக்கு லிம் பதிலடி

டிஏபி   நாடாளுமன்றத்    தலைவர்     லிம்  கிட்  சியாங்,   மசீச   தலைவர்   லியோ   தியோங்  லாய்    நேற்று   கூறியதுபோல்   14வது  பொதுத்  தேர்தலில்   பெந்தோங்கில்  போட்டியிடும்   எண்ணம்  தமக்கு  அறவே   இல்லை  என்று  மறுத்துள்ளார்.

விளம்பரத்துக்கு   ஆசைப்பட்டு  லியோ   அப்படிக்  கூறியிருக்கலாம்   என்றாரவர்.

“மசீச  துணைத்தலைவர்   வீ   கா  சியோங்  டிஏபி  தலைமைச்   செயலாளரும்  பினாங்கு   முதல்வருமான   லிம்  குவான்  எங்   தம்மை  எதிர்த்து   ஆயர்  ஈத்தாமில்    போட்டிபோடப்  போகிறார்  என்று  கூறி   நாடகம்  ஆடியதுபோல்   இப்போது   மசீச   தலைவர்   லியோ  தியோங்  லாயும்   விளம்பரத்துக்காக   நான் அவருக்கு   எதிராக   பெந்தோங்கில்   போட்டியிடப்போவதாகக்   கூறியுள்ளார்.

“எப்போது   நான்  அப்படிச்  சொன்னேன்  என்பதை   லியோ   கூற  முடியுமா?

“குவான்  எங்  பெயரை  வீ  பயன்படுத்திக்கொண்டதுபோல்  லியோ  தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள   என்னைப்  பயன்படுத்திக்கொள்ள  நினைத்திருக்கிறார்”,  என்று  லிம்  ஓர்   அறிக்கையில்  கூறினார்.

வீ,     தமக்கு  எதிராக  குவான்  எங்    களமிறங்க  விரும்புகிறார்  என்று  தாம்  கூறவே   இல்லை   என்று  மறுத்தார்.  சீனமொழி   நாளேடான    சைனா  பிரசும்    மசீசவுக்குச்  சொந்தமான    ஆங்கில  மொழிப்  பத்திரிகையான   த   ஸ்டாரும்    தாம்  சொன்னதைத்   தவறாக  பிரசுரித்து  விட்டன   என்றாரவர்.  அந்நாளேடுகளும்   செய்தியைத்   தவறாக  வெளியிட்டு  விட்டதாகக்  கூறி  மன்னிப்பு  கேட்டுக்கொண்டன.