குடிநுழைவுத் துறை பதிவு செய்துகொள்ளாதிருக்கும் குடியேறிகளுக்கு எதிராக “ஓப்ஸ் மேகா 2.0” நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
அதன்கீழ் இதுவரை 1725 பேர் சோதிக்கப்பட்டு 604பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாளிகள் அறுவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பிப்ரவரி 19இல் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்தபார் அலி தலைமையில் முதலாவது அதிரடிச் சோதனை சிலாங்கூர், பந்திங்கில் உள்ள ஒரு ‘கொங்சி’ வீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
“18 பேரைச் சோதனை செய்ததில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்- எண்மர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், மூவர் இந்தோனிய ஆடவர்கள், நால்வர் இந்தோனேசிய பெண்கள். அவர்கள் சட்டப்பூர்வ ஆவணங்கள் வைத்திருக்கவில்லை”, என முஸ்தபார் ஓர் அறிக்கையில் கூறினார்.
அதே இரவில் அவர் சிலாங்கூர் டிங்கிலிலும் ஒரு சோதனை நடவடிக்கையை மேற் கொண்டார்.
அதில் 214 பேர் சோதனை செய்யப்பட்டதில் 43பேர் சிக்கினர். அவர்களில் 25பேர் வங்காள தேசிகள், 19பேர் இந்தோனேசிய ஆடவர்கள், மூவர் பெண்கள்.
கைதான அனைவரும் நெகிரி செம்பிலான் லெங்கெங் போலீஸ் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.