‘வேற வேலை இருந்தா போய்ப் பாருங்க’- கைக்கூலிகளுக்கு அபாண்டியின் காட்டமான பதில்

சட்டத்துறைத்   தலைவர்   முகம்மட்  அபாண்டி   அலி,    இரண்டு   இணைய  செய்தித்தளங்களில்   தம்மை    நேரடியாகத்  தாக்கி   வெளிவரும்  செய்திகளைக்  குப்பைகள்   என்று   ஒதுக்கித்தள்ளினார். பணத்துக்காக  அவை  அப்படி   எழுதுவதாக     அவர்   சொன்னார்.

“அவை  கைக்கூலிகளால்  நடத்தப்படுபவை,  பணம்  கொடுத்தால்  அவர்கள்  எழுதுவார்கள்.

“அவர்களுக்கு  நான்  கூறுவது   என்னவென்றால் ‘வேற  வேலை  இருந்தால்  போய்ப் பாருங்க’…….அவர்கள்  என்ன  வேண்டுமானாலும்   எழுதட்டும்,  எனக்குக்  கவலை  இல்லை”,  என்றவர்  சொன்னதாக   மலாய்மொழி  நாளேடான  உத்துசான்  மலேசியா   கூறியது.

“அபாண்டி  உடனடியாக   சட்டத்துறைத்   தலைவர்   பதவியிலிருந்து   விலக    வேண்டும்”   என்று  ராஜா  பெட்ரா   கமருடினின்  மலேசியா  டுடே   இணையத்  தளத்திலும்  த  தேர்ட்  ஃபோர்ஸ்    என்ற  செய்தித்  தளத்திலும்   வெளிவந்த  கட்டுரை  குறித்து   கருத்துரைக்குமாறு   கேட்கப்பட்டபோது   அபாண்டி   அவ்வாறு   கூறினார்.

மலேசியா  டுடே  ஏற்கனவே   த  மலேசியன்  இன்சைட்   பற்றியும்   அதன்  தலைமைச்   செய்தியாசிரியர் , அபாண்டி  மனைவி   பரிடா  பேகம்  கே.ஏ. அப்துல்  காதரின்  சகோதரர்   ஜஹபர்  சாதிக்  பற்றியும்   கட்டுரைகளை   வெளியிட்டு     சர்ச்சையில்  சிக்கிக்   கொண்டது   குறிப்பிடத்தக்கது.

மலேசியா  டுடே-இல்  வெளிவந்த   கட்டுரைகள்  சட்டத்துறைத்  தலைவர்   அலுவலக    விவகாரங்களில்   வெளியார்   தலையீடு  இருப்பதாகக்  கூறியிருந்தன.

அக்கட்டுரைகள்    தம்மை   அவமதிப்பதாக   உள்ளன   என்று  பரிடா  பிப்ரவரி   13-இல்    மலேசியா  டுடே-க்கு  எதிராக   போலீஸ்   புகார்   செய்திருந்தார்.

“ராஜா    பெட்ரா   கமருடின்   என்னைப்  பற்றி    எழுதியதற்காக   போலீசில்   புகார்   செய்திருக்கிறேன்.

“இதற்குமேல்    எதுவும்   சொல்ல  முடியாது.  எல்லாவற்ரையும்   போலீசிடமே  விட்டு  விடுகிறேன்”,  என்று  பரிடா   கூறியதாக  கடந்த   செவ்வாய்க்கிழமை    த  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்    செய்தி   வெளியிட்டிருந்தது.