குவான் எங் : ஜிஎஸ்டி அகற்றப்படாவிட்டால், தொடர்ந்து உயரும்

நாட்டில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) தற்போதையப் போக்குகளுக்கு ஏற்ப தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

இது, 2021 மற்றும் 2025-க்கு இடையில், சிங்கப்பூர் அதன் ஜிஎஸ்டி-யை 7 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாக உயர்த்த உள்ளதாக, நேற்று சிங்கப்பூர் நிதி அமைச்சர் ஹெங் சுய் கியாட் அறிவித்ததன் அடிப்படையிலானது.

“ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டால், அதன் விகிதம் அதிகரிக்கும் எனும் உலகளாவிய போக்கை இது உறுதிப்படுத்துகிறது. ஜி.எஸ்.டி. அதிகரிப்பைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு, அதனை நீக்குவதே ஆகும்.

“இதுதான் பக்காத்தான் ஹராப்பானின் வாக்குறுதி. நாங்கள் அரசாங்கத்தின் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட முதல் 100 நாட்களுக்குள் ஜி.எஸ்.டி.-யை அகற்றுவோம், விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி) மீட்டெடுப்போம்,” என லிம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜிஇ14-ல், மக்கள் பி.என்.-ஐ தேர்வு செய்தால், ஜி.எஸ்.டி. தொடர்ந்து அமலில் இருப்பது மட்டுமல்ல,  எதிர்காலத்தில் அதன் விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது, காரணம் மலேசியாவைக் காப்பாற்ற ஜி.எஸ்.டி. ஒரு வழி என பி.என். நம்புகிறது என்றும் லிம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் உயர் வருமானம் கொண்ட நாடாக இருப்பதால், அவர்கள் ஜி.எஸ்.டி.-யைச் செயல்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்ததால், சிங்கப்பூர்  ஜி.எஸ்.டி.-ஐ அறிமுகம் செய்தபோது, அதன் விகிதம் 3 விழுக்காடு மட்டும்தான் என்று அவர் மேலும் கூறினார்.

“ஆனால், மலேசியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகம் 6 விழுக்காடாக இருந்தது, இதன் விளைவாக பொருளாதார இடப்பெயர்வு மட்டுமின்றி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது,” என்றார் அவர்.

டாக்டர் மகாதீர் நிர்வாகத்தின் போது, நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும், மக்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர் ஜி.எஸ்.டி.-ஐ அறிமுகம் செய்யவில்லை.

“இன்றைய பிஎன் ஆட்சி, இந்தச் சிக்கலைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை, நிதி மோசடிகளால் குறிப்பாக, 1எம்டிபி, RM52 பில்லியன் மதிப்புள்ள ஊழல் போன்ற “நிதி ஓட்டை’களை மூட ஒரு வழியைக் கண்டுபிடிக்க மட்டுமே விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.