சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்திவரும் சட்டப்பிரிவு 164 பிரச்சனையை, குறிப்பாக இந்திரா காந்தி மற்றும் அவரது முன்னாள் கணவர் முகமட் ரித்வான் அப்துல்லா ஆகியோரை உள்ளடக்கிய ஒருதலைபட்ச மத மாற்ற வழக்கு போன்றவைக் குறித்து பாஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், அனைத்தும் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகள், பாஸ் எம்.பி.க்கள் வாக்களித்து ஓரளவு அதனைத் தடுக்க முயற்சித்தனர் என்று பாஸ் துணைத் தலைவர், இட்ரிஸ் அஹ்மாட் கூறினார்.
“ஹராப்பான் தரப்பினர், இந்த முடிவில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, அம்னோ – பாரிசானுடன் ஒத்துழைத்து, இஸ்லாத்திற்கு எதிரான அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், எதிர்வரும் ஜிஇ14-ல், ‘சேதமடைந்த நாட்டைக் காப்பாற்றி’, இஸ்லாமியத்துடன் ஒரு வளமான நாட்டை உருவாக்க அம்னோ உறுப்பினர்கள் பாஸ்-க்கு வாக்களிக்க வேண்டும் எனவும் இட்ரிஸ் அழைப்பு விடுத்தார்.
“அம்னோ, மலேசியாவில் இஸ்லாத்தை வழிநடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது, அதே சமயத்தில் ஹராப்பானையும் நம்பியிருக்க முடியாது, காரணம் டி.ஏ.பி. இஸ்லாமியத்தை நிராகரிக்கிறது,” என அவர் மேலும் கூறியதாக ஹராக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
பாஸ் கட்சியை வீழ்த்துவதற்கு அமானா பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன என்றார் அவர்.
“ஹராப்பான் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினால், மகாதீரைப் பிரதமர் பதவியில் அமர்த்தக்கூடாது என்று பாஸ் சொன்னால், பாஸ் நஜிப்பை ஆதரிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர், ஆனால் ஊழலில் மகாதீர் நஜிப்புக்குக் குறைந்தவர் அல்ல என்பது தெரிந்த விஷயம்.
“பாஸ் அவ்வளவு முட்டாள் அல்ல, ஒருசேர படங்கள் எடுத்துகொண்டதால் மட்டும், அவர்கள் கூறுவதுபோல் அம்னோவில் இணைந்து, பாரிசான் நேஷனல் உடன் பாஸ் ஒத்துழைக்காது.
“அவர்களின் முட்டாள்தனத்தைச் சற்று ஒழித்து வைக்க வேண்டும், அதிகமாக வெளியே காட்டக் கூடாது,” என்றும் அவர் கூறியுள்ளார்.