அபராதத்தைச் செலுத்த, தான் வரைந்த கோமாளி படத்தை விற்க விரும்புகிறார் ஃபாமி ரேஸா

வரைகலை  வடிவமைப்பாளர்  ஃபாமி ரேஸா, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த, தான் வரைந்த பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்     கோமாளி  ஓவியத்தை விற்க உள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த  ஆண்டு  ஜூனில் , அக்கேலிச் சித்திரத்தை  மலேசியத் தொடர்பு, பல்லூடக  ஆணையத்தின் அடையாளச் சின்னத்தோடு  பதிவேற்றம்  செய்ததற்காக,   தொடர்பு,    பல்லூடகச்  சட்டம் (சிஎம்ஏ)  பிரிவு  233(1) (ஏ) இன்கீழ்   ஃபாமி மீது   குற்றஞ்சாட்டப்பட்டு, இன்று ஈப்போ  செஷன்ஸ்   நீதிமன்றம்   ஒரு  மாதச்  சிறையும்  ரிம 30,000  அபராதமும்  விதித்துத்   தீர்ப்பளித்தது.

தீர்ப்பை   எதிர்த்து   மேல்முறையீடு   செய்யவிருக்கும்   ஃபாமி, 40, சற்றும் அச்சம் இன்றி அமைதியாக இருந்தார்.

“நீதிபதியின் தீர்ப்பை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை, எனக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை மற்றும் அபராதத்தை எதிர்த்து நான் போராடுவேன்.

“ஈப்போ நீதிமன்ற லாக்காப்பில் 4 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், ரிம 10,000 செலுத்தி நான் விடுவிக்கப்பட்டேன்,” என்று அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேல்முறையீட்டினால் சிறைத் தண்டனை தாமதப்படுத்தப்பட்டாலும், RM30,000 அபராதம் செலுத்தியாக வேண்டும். ரிம 30,000 அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால், ஃபாமி 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்.

எனவே, ஃபாமி அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராதத் தொகையைச் செலுத்த, நிதி திரட்டுவதற்காக அந்தக் கோமாளி படத்தை ஆன்லைனில் விற்கவும் விநியோகிக்கவும் விரும்புகிறார்.

“நான் அபராதத் தொகையைச் செலுத்த, பணம் சேர்ப்பதற்குக் கோமாளி டி-சட்டைகள் (புதிய வடிவமைப்புகள்), கோமாளி முகம் கொண்ட ஸ்டிக்கர்கள் மற்றும் இதர கோமாளி முகம் கொண்ட பொருட்களை விற்க உள்ளேன். இதன்வழி நான் ஒரு பிரச்சாரத்தையும் முன்னெடுக்கிறேன், உங்களில் யார்யார் எனக்கு ஆதரவு கொடுக்க முடியும்?” என்று அவர் தனது தோழர்களைச் சமூக ஊடகத்தில் கேட்டிருந்தார்.

“அந்தப் படத்தைப் பகிர்ந்ததற்காக நம்மை அவர்கள் தண்டிக்கின்றனர். நாம் இன்னும் அதிகமாக அதனைப் பகிர்ந்தால் என்ன? #நாம் அனைவரும் கிளர்ச்சிக்காரர்கள்,” என்று அவர் தனது முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்.