மன்றங்கள் பதிவாளர் மீது ஹரப்பான் சட்ட நடவடிக்கை எடுக்கும்

அதிகாரப்பூர்வமான கூட்டணியாக பதிவு செய்வதற்கு பாக்கத்தான் ஹரப்பான் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு பதில் அளிக்க தவறிவிட்ட மன்றங்கள் பதிவாளரை (ரோஸ்) நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஹரப்பான் தீர்மானித்துள்ளது.

இந்த வார இறுதிக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறுகிறார்.

ரோஸுடன் தொடர்பு கொண்டிருந்தும் அதனிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றாரவர்.

எங்களுடைய மனுவை அவர்கள் (ரோஸ்) நிராகரித்து விட்டனர் என்று நாம் கூற முடியாது, ஏனென்றால் அவர்கள் அதைச் செய்யவில்லை.

அதே நேரத்தில் நாம் எதுவும் செய்ய முடியாது ஏனென்றால் நாம் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று மகாதிர் இன்று மதியம் பெட்டாலிங் ஜெயாவில் பெர்சத்து தலைமையகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ரோஸின் மௌனம் 14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு உதவுவதாக இருக்கக்கூடும் என்று கருத்தலாம் என்று கூறிய மகாதிர், அரசாங்க ஏஜென்சியான ரோஸ் அதன் கடமைகளை ஆற்றுவதில் ஒருபக்க சார்புடையதாக நடந்துகொள்வது சரியல்ல என்று அவர் மேலும் கூறினார்.