மலேசிய கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கியவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
கோல்காவலில் சிறந்து விளங்கிய செள சீ கியோங் சிறுநீர்ப்பை புற்றுநோயால் இன்று காலை கோலாலும்பூர் யுனிவர்சிடி மருத்துவ மையத்தில் காலமானார்.
சீ கியோங் மலேசியாவின் மிகச் சிறந்த கோல் காவலர் என்பதில் ஐயமில்லை. வரும் நவம்பர் 26-ல் அவருக்கு 69 வயதாகி இருக்கும்.
செயிண்ட் ஜான்ஸ் இன்ஸ்டிடியூசன் மாணவரான சீ கியோங் 13-வயதிலேயே 20வயதுக்குக் குறைவான தேசியக் குழுவுக்கு விளையாடினார். 15வது வயதில் தேசியக் குழுவுக்கு ஆடினார்.
1965-இலிருந்து 1969வரை மெர்டேகா கால்பந்து போட்டிகளில் மலேசியக் கோல்காவலராக சிறப்பாக விளையாடினார். 1968-இல் மெர்டேகா கிண்ணத்தை வென்ற குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.
அதன்பின் அவர் 1970களில் தொழில்முறை ஆட்டக்காரராகி ஹாங் காங்கில் ஜார்டின்ஸ் எப்சி, சவுத் சைனா ஏஏஏ, ஹாங் காங் ரேஞ்சர்ஸ் எப்சி ஆகிய குழுக்களுக்கு விளையாடினார்.
1966-இலிருந்து 1970வரை ஆசியாவின் தலைசிறந்த கோல்காவலர் என ஆசிய கால்பந்து சம்மேளனம்(ஏப்சி) அவரைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியது.
அவரது ஆட்டத்த்தால் கவரப்பட்ட பிரேசிலின் குருசீரோ கிளப் பிரேசிலில் வந்து ஆட அழைத்தது. ஆனால், சீ கியோங் அதை ஏற்கவில்லை.
விளையாட்டுத்துறையில் எவ்வளவோ சாதனைகள் செய்தவர் என்றாலும், சீ கியோங் எளிமையானவர், அடக்கமானவர் என்று பாராட்டினார் ஏப்சி முன்னாள் செயலாளர் பீட்டர் வேலப்பன்.
“அவர் மலேசியக் கால்பந்து துறைக்குப் பெருமை சேர்த்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர். மலேசியர்களுக்கு ஊக்கமளித்தவர். சீ கியோங்கை நினைத்து மலேசியர்கள் பெருமைப்படலாம்”, என்றாரவர்.