கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியைப் பாரிசானிடமிருந்து கைப்பற்றும் பக்காத்தான் ஹராப்பான் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம் என, கேமரன் மலை நாடாளுமன்றத்தின் முன்னாள் டிஏபி வேட்பாளர், எம்.மனோகரன் மலேசிய சோசலிசக் கட்சியைக் (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டார்.
பேராக் மாநிலத்தில், டிஏபியின் ஒரு நாடாளுமன்றம் மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளில் பி.எஸ்.எம். தனது வேட்பாளர்களை நிறுத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என அம்மாநிலத் தலைவர் ங்கா கோர் மிங் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
பி.எஸ்.எம். தனது வேட்பாளர்களை நிறுத்தி, பி.என். பக்காத்தான் ஹராப்பானுடன் மும்முனைப் போட்டியை ஏற்படுத்துவது, எதிர்க்கட்சிக்கான வாக்குகளை உடைக்கும் என ங்கா குற்றஞ்சாட்டினார்.
பஹாங்கில், கேமரன் மலை நாடாளுமன்றம் மற்றும் ஜெலாய் சட்டமன்றத்திற்கு போட்டியிட விரும்பும் ஆர்வலர் சுரேஸ்சின் முயற்சி அச்சமளிப்பதாக மனோகரன் தெரிவித்தார்.
“2013 பொதுத் தேர்தலில் (ஜிஇ13), கேமரன் மலை மற்றும் ஜெலாய்யில் பி.எஸ்.எம். போட்டியிடவில்லை. பக்காத்தான் ரக்யாட்டை ஆதரிப்பதாகக் கூறிக் கொண்டிருந்துவிட்டு, இறுதியில் என்னை ஆதரிக்க மறுத்துவிட்டது,” என்றார் அவர்.
“நான் 462 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று போனேன், ஆனால் பி.எஸ்.எம். உண்மையில் என்னை ஆதரித்து இருந்தால் நான் அங்கு வெற்றிபெற்றிருப்பேன் என ஆய்வுகள் கூறின.”
2008, ஜிஇ12-ல் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில், கெராக்கான் தலைவர் மா சியு கியோங்கை 1,470 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த மனோகரனை, ஜிஇ13-ல் டிஏபி கேமரன் மலைக்கு அனுப்பிவைத்தது. கேமரன் மலையில் ம.இ.கா. தேசியத் தலைவர் ஜி.பழநிவேலுவிடம் 462 வாக்குகள் வித்தியாசத்தில் மனோகரன் தோல்வி கண்டார்.
உண்மையான எதிரி
வாக்காளர்கள் நேரடி போட்டியைத்தான் விரும்புகிறார்கள், மும்முனைப் போட்டிகளை ஏற்படுத்தும் கட்சிகளைச் சிக்கல் ஏற்படுத்துபவையாக பார்க்கின்றனர் என மனோகரன் தெரிவித்தார்.
“இம்மாதிரியான சிக்கலை ஏற்படுத்தும் கட்சிகளை, மக்கள் கோபங்கொண்டு தண்டிக்கவே முனைகின்றனர்,” என்றார் அவர்.
நமது உண்மையான எதிரி பி.என். என அவர் பி.எஸ்.எம்.-க்கு நினைவுருத்தினார்.
“தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் உரிமை உண்டு, இல்லையேல் கட்சி உறுப்பினர்கள் திசையற்ற நிலையில் இருப்பதாக உணர்வார்கள். ஆனால், இங்கு பி.எஸ்.எம். ஹராப்பானை அணுக வேண்டும்.
அதேவேளையில், பி.எஸ்.எம். கேமரன் மலையில் போட்டியிட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் அவர்களின் எதிரி அல்ல,” என்றும் மனோகரன் தெரிவித்தார்.