மன்றங்கள் பதிவகத்தின் மீது ஹரப்பான் வழக்கு பதிவு செய்தது

 

பாக்கத்தான் ஹரப்பானை பதிவு செய்வதற்கு தாக்கல் செய்திருந்த மனுவுக்கு இதுவரையிலும் எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்துவரும் மன்றங்கள் பதிவகத்தின் பதிவாளருக்கு (ரோஸ்) எதிராக ஹரப்பானின் தலைவர்களில் பலர் இன்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர்.

ரோஸுக்கு எதிரான வழக்கை ஐந்து ஹரப்பான் தலைவர்கள் – தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா, டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன், பெர்சத்து தாலைமைச் செயலாளர் ஷஹாருடின் முகமட் சாலே மற்றும் அமனா உதவி செயலாளர் அபாங் அஹமட் கெர்டீ அபாங் மாசாகுஸ் – பதிவு செய்தனர் என்று வழக்குரைஞர் கோபிந் சிங் டியோ செய்தியாளர்களிடம் கூறினார்.

பல உத்தரவுகளுக்கு நாங்கள் மனுவை பதிவு செய்துள்ளோம் என்று கூறிய கோபிந்த், குறிப்பாக, ரோஸ் எங்களுடைய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் அல்லது எதிர்வினையாற்ற வேண்டும் என்பது எங்களுடைய வாதமாகும் என்றார்.

இன்று வரையிலும் எவ்வித பதிலும் இல்லை. சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற முறையில் இது போன்ற மனுவை கவனித்து பதில் கூறும் கடப்பாடு ரோஸுக்கு உண்டு என்று டிஎபி சட்டப்பிரிவின் தலைவரான கோபிந்த் கோலாலம்பூர், ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் இன்று கூறினார்.

அவருடன் வழக்கை பதிவு செய்த ஐந்து ஹரப்பான் தலைவர்களும் இருந்தனர்.

ரோஸ் இந்த வழக்கின் ஒரே பிரதிவாதி.