கேவியஸ் : பி.எஸ்.எம். போட்டியிடக்கூடாது என டிஏபி கூறுவது ஆணவம்

எதிர்வரும் ஜிஇ14-ல், கேமரன் மலையில் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தனது வேட்பாளரை நிறுத்தக்கூடாது எனக் கூறியிருக்கும் டிஏபி-யின் போக்கு ஆணவமானது என மைபிபிபி தேசியத் தலைவர் எம்.கேவியஸ் கூறியுள்ளார்.

பி.எஸ்.எம். போட்டியிட்டால், அது ஹராப்பானுக்குச் சாதகமாக அமையாது என, கேமரன் மலைக்கான முன்னாள் டிஏபி வேட்பாளர் எம்.மனோகரன் கூறியிருப்பது சுயநலமானது என்றார் கேவியஸ்.

“மக்கள் தங்களோடு இருக்கிறார்கள் எனும் ஆணவத்தில், டிஏபி அவ்வாறு கூறுகிறது. அவர்களின் வேட்பாளர்களுக்கு வெற்றிப் பாதையை அமைத்துத் தர, பிறக் கட்சியினர் விலகிச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

“எந்தக் கடின உழைப்பும் இல்லாமல், தேர்தல் காலத்தில் மட்டும் அவர்கள் தோன்றுகின்றனர்; மக்கள் குருட்டுத்தனமாக அவர்களை ஆதரிப்பார்கள் என நம்புகிறார்கள்,” என்று இன்று ஓர் அறிக்கையில் கேவியஸ் தெரிவித்தார்.

கேமரன் மலை – ம.இ.கா. , டிஏபி, பி.எஸ்.எம். , மைபிபிபி

கேமரன் மலையில், பாரிசான் நேசனல் சார்பில் போட்டியிட கேவியஸ் ஆர்வம் கொண்டுள்ளார், அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு ம.இ.கா.-வும் குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பொதுத் தேர்தலில், ம.இ.கா. தேசியத் தலைவராக இருந்த ஜி.பழநிவேலு, அத்தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். ஆனால், தற்போது அவர் ம.இ.கா.-வில் இருந்து விலகிவிட்டார் என்பதும் அறிந்ததே.

பக்காத்தான் ஹராப்பான் சார்பில், டிஏபி அங்கு போட்டியிடவுள்ளது. ஆக, போட்டியிட விரும்பும் மற்றக் கட்சிகளை டிஏபி வரவேற்க வேண்டும் என கேவியஸ் தெரிவித்தார்.

“டிஏபி ஆணவத்தோடு நடந்துகொள்ளக்கூடாது, பி.எஸ்.எம். வேட்பாளரை நிறுத்தக்கூடாது எனக் கூறக்கூடாது.

“அவர்கள் (பி.எஸ்.எம்.) ஆற்றியப் பணிகள் பயனற்றவையா? டிஏபி-யின் பணிகள் மட்டும்தான் சிறப்பானவையா?” என்றார் கேவியஸ்.

நான் அங்குச் சேவையாற்றி வருகிறேன்

கேவியஸ் கேமரன் மலையில் சேவையாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

“கடந்த 4 ஆண்டுகளாக, நான் அங்கு 600-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, கலந்துகொண்டிருக்கிறேன், வாரத்தில் 6 நாட்கள் அங்கேயே தங்குகிறேன். ஆக, வெற்றி வாய்ப்புகொண்ட வேட்பாளர் நான் என, நான் உற்சாகமாகக் கூறிக்கொள்ளலாம்.”

“டிஏபி-க்குப் போட்டிகள் பிடிப்பதில்லை என தெளிவாகத் தெரிகிறது, அல்லது புதிய வேட்பாளர்களைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்களா?”

எதிர்க்கட்சிகளுக்கிடையே மோதல்கள் – ஆளுங்கட்சியின் பக்கம் மக்கள்

எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதல்கள், கேமரன் மலை மக்களை பி.என். பக்கம் அணுக்கமாக இருக்க தூண்டியுள்ளது என்றார் கேவியஸ்.

“ஒவ்வொரு முறையும் மக்கள் என்னிடம் கூறுகிறார்கள், எதிர்க்கட்சியின் இனிமையான வாக்குறுதிகளில் ஆசைப்பட்டாலும், பிஎன்-னின் நிலைத்தன்மை மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.”

“நான் உள்ளூர்வாசி என்பதால், எனக்கு வாக்களிக்கப்போவதாக அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர். நான் அவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறேன். அவர்களின் பிரச்சனைகள் எனக்கு புரியும்.”

“அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பேசக்கூடிய ஒரு வேட்பாளரை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்,” என்றார் கேவியஸ்.