மகாதிர் திரும்பி வரக்கூடாது, மஇகா இளைஞர் தலைவர் எச்சரிக்கை

 

டாக்டர் மகாதிர் மீண்டும் பிரதமர் ஆகும் சாத்தியம் குறித்து மலேசிய இந்தியர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர் ஆட்சியிலிருக்கும் போது இந்திய சமூகத்திற்கு எந்த உயர்பதவியும் அளிக்கவில்லை என்று மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சி. சிவராஜா கூறுகிறார்.

“தவறான தலைவர்” ஒருவரை தேர்ந்தெடுத்தால் இந்தியர்களுக்கு அதிகமான சந்தர்ப்பங்கள் வழங்குவதற்கு பல ஆண்டுகளாக பிரதமர் நஜிப்பின் நிருவாகம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சிவராஜா கூறியுள்ளார்.

நஜிப் இந்திய சமூகத்திற்கு அளித்த அங்கீகாரத்திற்கு எடுத்துக்காட்டாக பல இந்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டத்தை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

போலீஸ் அதிகாரி எ. தெய்வீகன், சுங்கவரி இலாகா தலைமைச் செயலாளர் சுப்ரமணியம் துளசி, சிறைச்சாலைகள் ஆணையர் நரீண்டர் சிங் மற்றும் புக்கிட் அமான் வணிக குற்றவியல் விசாரணை இலாகா இயக்குனர் அமர் சிங் ஆகியோர் பதவி உயர்வு பெற்றவர்கள் என்கிறாரவர்.

இந்த நியமனங்கள் இன அல்லது சமய வேறுபாடுகள் இல்லாமல் திறமையின் அடிப்படையில் வெகுமதி அளிக்கும் நஜிப் நிருவாகம் கொண்டிருக்கும் கடப்பாட்டிற்கு ஆதாரமாக இருக்கின்றன என்று அவர் மேலும் கூறுகிறார்.

பல ஆண்டுகளுக்கு இந்தியர்கள் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் சேவையாற்றியுள்ளனர். மகாதிரின் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய சிவராஜா, நஜிப் அரசாங்கத்தின் கீழ் அவர்கள் பதவியின் உச்சத்திற்கே செல்வதற்கான பாதை இருக்கிறது என்றார்.

இந்தியச் சமூகத்தின் எதிர்காலம் மிக ஒளிமயமானதாக இருக்கும் என்பதற்கு மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்ஐபி) ஓர் ஆதாரம் என்று அடித்துச் சொல்கிறார் சிவராஜா.