பி.எஸ்.எம். : மலேசியாவின் மோசமான ஊழல் குறியீடு,  தேசிய முன்னணியின் பலவீனமான ஆட்சியைக் காட்டுகிறது 

மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் குறியீட்டில் (சிபிஐ), மலேசியா மோசமான தரநிலையில் இருப்பதானது, தேசிய முன்னணியின் பலவீனமான ஆட்சியைப் பிரதிபலிப்பதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறுகிறது.

எனவே, பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நாடாளுமன்றத்தைக்  களைத்துவிட்டு, புதிய அரசின் தேர்வுக்கு மக்களின் கைகளில் விட்டுவிடவேண்டும்  என மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் மு.சரஸ்வதி வலியுறுத்தினார்.

நேற்று, அனைத்துலக ஊழல் குறியீட்டு தரநிலையில்  மலேசியா ஏழுபடி சரிவுகண்டு, 180 நாடுகளில்  62-வது இடத்தில்   இருக்கிறது என சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

“இது தேசிய முன்னணி அரசின் மோசமான நிர்வாகத்தைக் காட்டுகிறது. திறனற்ற நிர்வாகத்தினாலேயே, கடந்த 5 ஆண்டுகளாக மலேசியா படு மோசமான தரநிலையில் உள்ளது. இதனைச் சாதாரணமான ஒன்றாக கருதமுடியாது,” என சரஸ்வதி கூறினார்.

1எம்டிபி , பெல்டா மற்றும் சபா நீர்வாரிய ஊழல் விவகாரங்கள் யாவும் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்திருக்கின்றன என்றார் அவர்.

“அதுமட்டுமின்றி, அந்த ஊழல்களைப் பகிங்கரப்படுத்தும் தரப்பினர் மீது குற்றஞ்சாட்டப்படுவது, நிலையானது ஜனநாயகத்திற்கு, விரோதமான செயலாகும்,” என்றும் அவர் கூறினார்.

நேற்று காலை, பி.எஸ்.எம். பத்துகாஜா நாடாளுமன்ற வேட்பாளரும் வழக்கறிஞருமான குணசேகரனுடன், ஈப்போ தாமான் பெர்தாமா மக்களைச் சந்தித்த பின்னர் பதிரிக்கையாளருக்கு வெளியிட்ட அறிக்கையில் சரஸ்வதி இவ்வாறு வலியுறுத்தினார்.

“ஆகவே, உடனடி தீர்வுக்கு மக்களிடம் விட்டு விடும் பொருட்டு, காலம் தாழ்த்தாமல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதுதான் உகந்தது,” என்றார், பி.எஸ்.எம். ஜெலாப்பாங் சட்டமன்ற வேட்பாளருமான மு.சரஸ்வதி.