மகாதிர்: நஜிப் மீதான பயம் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு காலத்து பயத்தைவிட அதிகமானது

 

இருப்பத்திரண்டு ஆண்டுகால அவரது ஆட்சியில் மகாதிர் நாட்டை இரும்புக் கரம் கொண்டு ஆண்டார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இருந்து வருகிறது.

ஆனால், மலேசிய வரலாற்றில் மக்கள் தற்போதைய பிரதமர் நஜிப்பின் தலைமையத்தின் கீழ் பயப்படுவதைப் போல் பயப்பட்டதே இல்லை என்று மகாதிர் கூறிக்கொள்கிறார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது அனுபவித்த பயத்தைவிட இப்போது அது அதிகமாக இருக்கிறது என்றார் மகாதிர்.

அவர்கள் எதைக் கண்டு பயப்படுகிறார்கள்? அவர்கள் நஜிப்பைக் கண்டு பயப்படுகிறார்கள் என்று இன்று மாலை ஒரு வலைத்தள பதிவில் அவர் கூறுகிறார்.

நஜிப்புக்கு பயந்து அரசு ஊழியர்கள் உண்மையைச் சொல்ல பயப்படுகிறார்கள். வேலை போய் விடும், பதிவி இறக்கம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படலாம் என்று பயப்படுகிறார்கள்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், ஓர் அரசு நிறுவனத்தில் இயக்குனராகும் சந்தர்ப்பை இழக்க நேரிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்று மகாதிர் மேலும் கூறுகிறார்.

எதிரணியுடன் வணிகர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தால் தங்களுக்கு ஏதாவது ஏற்படும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்றும் மகாதிர் கூறுகிறார்.

அரசாங்கத்தின் எதிரிகள் என்று கருதப்படும் தனிப்பட்டவர்களிடமிருந்து விலகி இருக்கும்படி சிலர் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் மகாதிர்.

ஒத்துப் போகாதவர்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் பலவிதமான கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறும் மகாதிர், அரசாங்கள் குத்தகைகள் கிடைக்காது; கிடைத்த குத்தகைகள் இரத்து செய்யப்படுகின்றன என்றாரவர்.

எதிரணியுடன் தொடர்புடைய பெரிய நிறுவனங்களின் தலைவர்களை வருமான வரி இலாகா சுற்றி வருகிறது. வரிகள் கட்டி இருந்தாலும் மேற்கொண்டு பணம் கோரப்படுகிறது. இதற்கு அடிப்படை இல்லை என்றாலும், கோரப்படுகிறது. சிலவேளைகளில் கோரப்படும் பணம் மில்லியன் கணக்கில் இருக்கிறது. கொடுக்க முடியவில்லை என்றால்,நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன, கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன என்று மகாதிர் மேலும் கூறினார்.

அம்னோ உறுப்பினர்களும் அடிமட்ட தலைவர்களும் போட்டிக் கட்சியினரைச் சந்திக்க பயப்படுகின்றனர்.

வாக்குகள் இரகசிமானவை. ஆனால், யார் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பது அரசாங்கத்திற்கு தெரியும் என்று கூறி மக்களைப் பயமுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக, பிஎன்னைத் தவிர மற்றவர்களுக்கு வாக்களிக்க மக்கள் பயப்படுகின்றனர். உதவித் தொகைகள் பெறுபவர்கள் அவற்றை இழக்கக்கூடும் என்றும் பயப்படுகின்றனர்.

அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை கூறும் போது குசுகுசுவென்று பேசுகின்றனர். நஜிப் கேட்டு விட்டால் நடவடிக்கை எடுப்பார் என்று பயப்படுகின்றனர் என்கிறார் மகாதிர்.

ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளன என்றும் மகாதிர் கூறினார்.

நஜிப்பின் தவறான செயல்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆவணங்கள் தயாரிப்பதில் அவர்கள் பங்காற்றியுள்ளனர். ஆனால் அவர்கள் எதையும் சொல்ல பயப்படுகிறார்கள்.

“கிட்டத்தட்ட அனைத்து மலேசியர்களும் பயத்தில் இருக்கின்றனர், ஏனென்றால் நஜிப் அதிகாரிகளையும் அரசாங்க இலாகாகளையும் பயன்படுத்தி அவர்களைச் சித்திரவதை செய்ய முடியும்.

“ஆம். மலேசியர்கள் இப்போது பயத்தில் வாழ்கின்றனர். அவர்கள் நஜிப்புக்கு பயப்படுகின்றனர். இதன் காரணமாக, அவர்கள் பிஎன்னுக்கு வாக்களிப்பர். பிஎன் வெற்றி பெறும். இப்போது மேலோங்கியிருக்கும் பயம் தொடரும்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.