வெளிமாநிலங்களில் குடியேறிய கிளாந்தானியர்களைத் திருப்பிக்கொண்டுவர பாரிசானால் முடியும், கு லி நம்பிக்கை

14-வது பொதுத் தேர்தலில், கிளாந்தான் மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பி.என்.னுக்கு வழங்கினால், பிற மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்த 500,000-க்கும் மேற்பட்ட கிளாந்தானியர்களை, அம்மாநிலத்திற்குத் திருப்பிக்கொண்டுவந்து, அவர்களைச் சேவையாற்ற வைக்க முடியும் என குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்ஸா தெரிவித்தார்.

பிற மாநிலங்களில் அனுபவித்துவரும் கல்வி, பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய அனைத்து அம்சங்களையும், பி.என்.-ஆல் கிளாந்தானில் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று தெங்கு ரஸாலி நம்பிக்கை தெரிவித்தார்.

“20 ஆண்டுகளுக்கும் மேலாக, பாஸ் நிர்வாகத்தால் எந்தவொரு மேம்பாட்டையும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியாததால், கிளாந்தான் மக்கள் மற்ற மாநிலங்களுக்குக் குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

“பி.என்.-ஆல் மட்டுமே நிலைமையை மீட்டெடுக்க முடியும் என்பதால், இந்த 14-வது பொதுத்தேர்தலில் கிளாந்தானியர்கள் பி.என்.னுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்,” என்று, நேற்று கோத்தா பாருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

குவா முசாங் எம்.பி.-ஆக, கடந்த 45 வருடங்களாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

“ஜிஇ14-ல், நான் வேட்பாளரானால், அது 12-வது தவணையாகும். சில பிஎன் தலைவர்கள் என்னை வந்து சந்தித்து, இம்முறையும் போட்டியிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். அதை நான் கருத்தில் கொள்வேன்,” என்று அவர் கூறினார்.

-பெர்னாமா