அம்னோ உச்சமன்ற உறுப்பினரான தாஜுடின் அப்துல் ரஹ்மான், ‘தோலை மறந்த வேர்க்கடலை’-யாக செயல்பட வேண்டாம் என்று டான் ஸ்ரீ ராபர்ட் குவோக்கை எச்சரித்தார்.
மலேசியாவின் ஆகப் பணக்காரராக விளங்கும் ராபர்ட் குவோக், நாட்டை டிஏபி நிர்வகிக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
குவோக் அனுபவித்துவரும் ஆடம்பர வாழ்க்கை, தற்போதைய பாரிசான் நேஷனல் கொள்கை மற்றும் நிர்வாகத்தின் விளைவாகும், டிஏபி-யினால் வந்தது அல்ல என்பதை அவர் உணர வேண்டும் என்றும் தாஜுடின் கூறினார்.
“இதுதான் பணக்காரர்களாக மாறிய பிறகு எழும் பிரச்சினை, பி.என். அரசாங்கத்தின் கொள்கைகளினாலேயே அவர் பணக்காரராக ஆனார், டிஏபி அரசாங்கத்தின் கொள்கைகளிலிருந்து அவர் செல்வம் சேர்க்கவில்லை.
“அவர் அதனை நினைவில் கொள்ள வேண்டும், நன்றி மறக்கக் கூடாது, தன்னை அவர் உணர வேண்டும்,” என்று தஜூடின் கூறியதாக உத்துசான் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனர்கள் நாட்டை ஆளும் வகையில், பாரிசான் நிர்வாகத்தை டிஏபி கைப்பற்ற வேண்டும் என குவோக் எண்ணம் கொண்டிருப்பதாக உத்துசான் மலேசியா நேற்று செய்தி வெளியிட்டது.