ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகம் – மே மாதத்தில் திறக்கப்படும்

 

எதிர்வரும் மே மாதத்தில் ஜெருசலத்தில் அமெரிக்கா அதன் தூதரகத்தை திறக்கும் என்று கடந்த வெள்ளிக்கிழமை யுஎஸ் அறிவித்தது. அமெரிக்க கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அமெரிக்க ஆதரவு நாடுகளில் பிரச்சனையைக் கிளப்பும், ஏனெனில் அந்நாடுகள் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று கடந்த டிசம்பரில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார். அவ்வறிவிப்பினால் அமெரிக்காவின் அரேபிய நட்பு நாடுகள் சினமடைந்துள்ளன. ஜெருசலத்தின் கிழக்குப் பகுதியை தங்களுடைய தலைநகராக்க விரும்பும் பாலஸ்தீனர்கள் திகில் அடைந்துள்ளனர்.

மே மாதத்தில் ஜெருசலத்தில் தூதரகம் திறக்கும் வரலாற்றுப்பூர்வமான நடவடிக்கை மற்றும் இஸ்ரேலின் 70 ஆம் ஆண்டு நிறைவு நாள் ஒரே சமயத்தில் இடம்பெறுவது தங்களுக்கு மனக் கிளர்ச்சியை அளிக்கிறது என்று அமெரிக்க வெளிவுறத்துறை இலாகா பேச்சாளர் கூறினார்.

மேயில் ஜெருசலத்தில் தூதரகம் திறக்கப்படுவது எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்னதாகவே இடம் பெறுகிறது. கடந்த மாதம், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தூதரக இடமாற்றம் 2019 ஆண்டின் இறுதியில் நடைபெறும் என்று இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பை, “இஸ்ரேலிய மக்களுக்கு ஒரு மகத்தான நாள்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாகு வரவேற்றார்.

இந்த அறிவிப்பு பாலஸ்தீனர்களை சினமடையச் செய்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என்று பாலஸ்தீன அதிபர் மாமுட் அபாஸின் பேச்சாளர் நபில் ஆர்டைனா கூறினார்.