நஜிப் விடுவிக்கப்பட வேண்டும் எனும் ஏஜியின் கருத்து, முடிவல்ல

1எம்டிபி விவகாரத்தில், பிரதமர் நஜிப் எந்தவொரு தவறும் செய்யவில்லை எனும் அட்டர்னி ஜெனரல், முகமட் அஃபென்டியின் முடிவு இறுதியானது அல்ல.

புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங், இதனை முடிவு செய்ய வேண்டியது அட்டர்னி ஜெனரலோ (ஏஜி) அல்லது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமோ (எம்ஏசிசி) அல்ல; மாறாக, நீதிமன்றம் என்று கூறினார்.

“ஏஜி மற்றும் எம்ஏசிசி கருதுவதால் மட்டும், 1எம்டிபி பிரச்சனையில் பிரதமர் தவறிழைக்கவில்லை என முடிவுக்கு வருவது தவறாகும் என நான் நினைக்கிறேன்.”

“ஏஜி மற்றும் எம்ஏசிசி ஆகியவை, சட்டத்தின் நடுவர்கள் என அங்கீகரிக்கப்பட்டவை அல்ல, எனவே 1எம்டிபி பிரச்சனையில் பிரதமரின் அலட்சியப் போக்கு பற்றிய அவர்களின் அறிக்கை, அவர்களுடைய சொந்தக் கருத்துக்கள் மட்டுமே.

“அவர்களின் கருத்தை முழுமையான உண்மையாகக் கருத முடியாது, ஏனென்றால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் நீதித்துறை அறிக்கையை வழங்குவதற்கு அதிகாரம் கொண்டுள்ளன,” என்று வழக்கறிஞருமான அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“எனவே, 1எம்டிபி பிரச்சனையில் பிரதமர் தவறு செய்தாரா இல்லையா என்பதை, அங்கீகரிக்கப்பட்ட சட்ட நீதிமன்றத்தால் மட்டுமே முடிவு செய்ய முடியும்.”

26 ஜனவரி 2016-ல், அஃபென்டி அலி வெளியிட்ட அறிக்கை மற்றும் எம்ஏசிசி அறிக்கையின் அடிப்படையில், 1எம்டிபி வழக்கில் நஜிப் குற்றம் செய்யவில்லை என்று முறையீட்டு நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பின் முடிவு பற்றி அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் காரணங்களுக்குப் பின்னால் உள்ள தர்க்கத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதாகவும் ராம் கூறினார்.