டோல் ஒப்பந்தங்கள் கையொப்பமானபோது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எங்கு போனார் என்று கேட்கிறார் முன்னாள் செய்தியாசிரியர் ஒருவர்.
முகநூலில் பதிவிட்டுள்ள நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் குழும முன்னாள் செய்தியாசிரியாரான முஸ்டபா கமில் முகம்மட் ஜானோ, நஜிப் இப்பொது டோல் கட்டணத்தை அகற்ற விரும்புவதாகக் கூறுவது அரசியல்தானே தவிர வேறல்ல என்றார்.
“சாலைக்கட்டணத்தை அகற்ற விரும்புவதாக ஓரே ஒருவர் சொன்னால் மட்டுமே நம்புவேன். அவர்தான் (டிஏபி மூத்த தலைவர்), லிம் கிட் சியாங். .
“மற்றவர்கள் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் அப்படிச் சொல்வார்கள்.
“ஏன், அத்தனை சாலைக்கட்டண ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன அப்போதெல்லாம் பிரதமர் நஜிப் எங்கு போனார்?”, என்றவர் வினவினார்.
நஜிப், நெடுஞ்சாலைக் கட்டண விதிப்பை எதிர்ப்பதாகவும் அது முன்னாள் பிரதமர் ஒருவரின் ‘ கைங்கரியம்’ என்றும் குற்றஞ்சாட்டியிருப்பதற்கு முஸ்டபா அவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
“எனக்கு முன் இருந்தவருக்கு டோல்மீது அலாதி நம்பிக்கை.
“எனக்கு டோல் பிடிக்காது….எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் டோலை அகற்றுவேன். டோல் நல்லதல்ல”, என்று நஜிப் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் சொல்லியதற்கு மாறாகச் செய்திருக்கிறார். பிஎன்னின் 13 ஆவது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததற்கு மாறாக கிள்ளான் பல்லத்தாக்கில் பல டோல் கட்டணங்களை நஜிப் உயர்த்தி இருக்கிறார் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா குறிப்பிட்டிருந்ததை முஸ்டபா சுட்டிக் காட்டுகிறார்.
மேலும் பல டோல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை முஸ்டபா பட்டியலிட்டுள்ளார். 1980-களிலிருந்து நஜிப் அமைச்சரவையின் உறுப்பினராக இருந்திருப்பதையும் முஸ்டபா சுட்டிக் காட்டுகிறார்.