ஜிஇ14 : ஜொகூரில் சுனாமி ஏற்படாது, கெராக்கான் நம்பிக்கை

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் கூட்டணிக் கட்சிகளுக்கு அரசியல் சுனாமி எதுவும் ஏற்படாது என்று ஜொகூர் கெராக்கான் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது.

சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் சாதகமான வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு, இந்த நம்பிக்கை வந்தது என்று ஜொகூர் மாநிலக் கெராக்கான் தலைவர் தீ கொக் சீ கூறினார்.

கடந்த 2013-ல், வெற்றி கண்ட இடங்களில் எந்தவொரு முன்னேற்றத்தையும் கொண்டுவராத எதிர்க்கட்சியால், தாங்கள் ஏமாற்றப்படுவதை இந்த இரு சமூகத்தினரும் தெரிந்துகொண்டனர் என்றார் அவர்.

அந்த ஏமாற்றத்தைத் தொடர்ந்து, அவர்கள் பி.என். வேட்பாளர்களுக்கு வாக்களிப்பர் என்றும் அவர் சொன்னார்.

“ஆக, இம்முறை இன்னும் அதிகமான இடங்களை நம்மால் வெல்ல முடியும் என்று நம்பிக்கை உள்ளது, இதில் முக்கியம் என்னவென்றால், எதிர்க்கட்சியை எதிர்கொள்ள  பி.என். உறுப்புக்கட்சிகளுக்கு இடையில் வலுவான ஒத்துழைப்பு தேவை,” என இன்று கூலாயில் கெராக்கானின், சீனப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் அவர் கூறினார்.

ஜிஇ14-ல், கெராக்கான் சார்பில், லியாங் தெக் மேங் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற நாற்காலியைத் தக்க வைத்துகொள்ள போட்டியிடவுள்ளார். புக்கிட் பாத்து, ஸ்கூடாய் மற்றும் பெமானிஸ் சட்டமன்றத் தொகுதிகளிலும் கெராக்கான் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜிஇ13-ல், நாடு முழுவதிலும் 12 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 33 சட்டமன்றங்களில் கெராக்கான் போட்டியிட்டது. அவற்றில், ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் (சிம்பாங் ரெங்கம்), பெமானிஸ் (ஜொகூர்), இலோபுரா மற்றும் தஞ்சோங் பாபாட் (சபா) ஆகிய 3 சட்டமன்றங்களில் மட்டுமே அது வென்றது.

இருப்பினும், தெலுக் இந்தான் நாடாளுமன்றத்தை, மே 2014-ல் நடந்த இடைத்தேர்தலில் அது மீண்டும் கைப்பற்றியது.

-பெர்னாமா