ஜிஇ14 : சிலாங்கூரை பி.என். மீட்டெடுத்தால், கோயில்கள் உடைக்கப்படாது

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரில் பாரிசான் நேசனல் ஆட்சி அமைந்தால், அம்மாநிலத்தில் கோயில்கள் இடிக்கப்படாது என்று பிரதமரின் சிறப்பு அதிகாரி இஸ்ஸாம் ஜாலில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நேசன் பத்திரிக்கைக்கான ஒரு சிறப்பு நேர்காணலில், பி.என். அரசாங்கம் சட்டவிரோதமான கோயில் உடைப்பைக் கடுமையாக எதிர்ப்பதாக இஸ்ஸாம் கூறியுள்ளார்.

“இந்த நாட்டிலுள்ள மத சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை முதன்மையானவை. 2009-ஆம் ஆண்டில் நஜிப் இரசாக் பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து, பல்லினங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்,” என்று அவர் கூறினார்.

நாட்டில் இருக்கும் கோயில்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்காக RM50 மில்லியனுக்கும் அதிகமான தொகையை, இந்து சமூகத்திற்காக ஒதுக்கியுள்ளோம் எனவும் இஸ்ஸாம் கூறினார்.

“ஆனால், 2008-ல் பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை எடுத்துக் கொண்டது முதல், அம்மாநில அரசு இருபது கோயில்களை இடித்துத் தள்ளியதை அறிந்து நான் வருந்துகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

புதிய வீடுகளுக்கான வரி குறைக்கப்படும்

ஜிஇ14-ல், பி.என். சிலாங்கூர் மாநில அரசை மீட்டெடுத்தால், புதிய வீடுகளின் விலைகளைக் குறைக்கும் வகையில், வீட்டு வரிகளைக் குறைக்கும், இதன்வழி அதிகமான இளைஞர்கள் சொந்த வீடுகளை வாங்க முடியும். அதோடு மட்டுமின்றி, வாழ்க்கைச் செலவினச் சுமைகளையும் குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“ஹராப்பான் அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட வீடமைப்பு மற்றும் வணிக வரிகளில் மிகப்பெரிய அதிகரிப்பு காரணமாக, வீட்டு விலைகளோடு, குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கான வாடகை ஆகியவையும் கணிசமாக உயர்ந்துள்ளன.

“இது பொருள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரிக்க வழிவகுத்தது, இதனால் சிலாங்கூர் மக்களின் வாழ்வாதாரம் துன்பத்திற்குள்ளாகி போனது,” என்று அவர் விளக்கினார்.

சிலாங்கூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் சிலாங்கூரில் இனி வீடுகளை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இல்லையேல் அவர்கள் வீட்டு கடனுக்காக மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் இஸ்ஸாம் கூறியுள்ளார்.

-மலாய்மெய்ல் ஆன்லைன்