30 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து, கடந்த 2016-ல் வழங்கப்பட்ட தஞ்சோங் லங்சாட் ஈமக்கிரியை நில விவகாரத்தை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் இரா. வித்தியானந்தன் கைக் கழுவி விட்டதாக ஜொகூர் ஜசெக சந்திர சேகரன் சாடியுள்ளார்.
ஜொகூர் பாரு, லீடோ கடற்கரை, மேம்பாட்டு திட்டத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டதால், கடந்த 20 ஆண்டுகளாக ஜொகூர் இந்தியர்கள் ஈமக்கிரியைச் செய்ய ஒரு கடற்கரை இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
அவர்களின் விண்ணப்பங்களின் நிலை குறித்து, கடந்த ஏப்ரல் 2016-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தில், எதிர்க்கட்சியைச் சார்ந்த, கான் பெக் செங் எழுப்பியக் கேள்வியின் காரணமாக தஞ்சோங் லங்சாட், பாசீர் கூடாங் வட்டாரத்தில் 2 ஏக்கர் நிலம் வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஆ.சந்திர சேகரன் தலைமையிலான குழு, மாநில மந்திரி பெசார் காலிட் நோர்டினிடம் நிலம் கோரி மகஜர் வழங்கியதோடு, அதன் நகலை கான் மற்றும் வித்தியானத்தனுக்கும் வழங்கியது என சந்திர சேகரன் தெரிவித்தார்.
ஆனால், நிலம் வழங்கப்பட்டு ஆண்டுகள் இரண்டு கடந்து கொண்டுடிருக்கும் நிலையில், அந்தப் புதிய இடத்தில் எந்த ஒரு கட்டுமான பணியும் தொடங்காதது தமது தரப்பினருக்குப் பல ஐயங்களை ஏற்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, வித்தியானந்தன் தமது ஆட்சி காலத்திலேயே இந்த ஈமக்கிரியை நில விவகாரத்தைத் தீர்த்து வைக்க வேண்டும் (முடியுமா) என , ஜொகூர் இந்தியர்கள் சார்பில் எதிர்பார்ப்பதாக சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.