பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக்குக்கு எதிராக கருத்துரைத்ததன் மூலமாக மலாய்க்காரர்களின் உணர்வுகளைக் கிளறி விட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சைனுடின் மைடின் கூறினார்.
பிஎன் அரசாங்கத்தால்தான் குவாக் பெரும் செல்வந்தராக முடிந்தது என நஜிப் கூறியிருந்தார். குவாக் டிஏபிக்கு நிதியுதவி செய்வதாக வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின் குற்றஞ்சாட்டியதை அடுத்து நஜிப் அவ்வாறு கூறினார்.
“நாட்டுக்கு குவாக்கின் பங்களிப்பை, சீனாவுடன் உறவுகள் சுமூகமாவற்கு அவர் ஆற்றிய பணி போன்றவற்றை நினைத்துப் பார்க்காமல் , நம்பத்தகாத ஒருவர் சொன்ன தகவலை வைத்து பிரதமர் மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரருக்கு எதிராக மலாய்க்காரர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தெரியவில்லை”, என சைனுடின் ஒரு வலைப்பதிவில் கூறினார்.
“ஒருவேளை பொதுத் தேர்தலை நினைத்துக் கலவரமடைந்துள்ள நஜிப், போலிச் செய்தி என்றுகூட பாராமல் கிடைக்கும் தகவல்களை எல்லாம் நம்பத் தொடங்கி விட்டார்போலும்.
“ராஜா பெட்ரா உள்பட அம்னோ மற்றும் அரசாங்க ஆதரவாளர்கள் தரும் அத்தனை தகவல்களும் உண்மைதான் என்றவர் நம்புகிறார்போலும்”, என்றாரவர்.
குவாக் அவரது உறவினர் ஜேம்ஸ் குவாக் மூலமாக டிஏபிக்கு நிதியுதவி செய்து வருவதாக ராஜா பெட்ரா கூறியிருந்தார்.
அக்கூற்றை ஜேம்ஸ் குவாக் மறுத்தார். டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்கும் கோடீஸ்வரரிடமிருந்து பணம் பெற்றதில்லை என அடித்துக் கூறியிருக்கிறார்.