குவாக் பற்றிக் கூறப்படுவதை ஜோகூர் தலைவர்கள் நம்பவில்லை

மலேசியாவின்  மிகப்  பெரிய  கோடீஸ்வரர்   ரோபர்ட்  குவாக்    எதிர்க்கட்சிக்கு  நிதியுதவி   செய்வதாகக்  கூறப்படுவதை   ஜோகூர்   தலைவர்கள்   இருவர்  நம்பவில்லை.

ஏழு   தவணைகள்   ஜோகூர்   எம்பி-ஆகவுள்ள   ஷாரிர்  சமட்,  குவாக்கை   ஒரு   தொழில்   அதிபராக   நன்றாகவே   தெரியும்   என்றும்   அவர்   அரசியலில்   தலையிடுபவர்   அல்ல   என்றும்   கூறியதாக   சைனா  பிரஸ்  முதல்  பக்கத்தில்   செய்தி  வெளியிட்டுள்ளது.

குவாக்  ஜோகூர்  பாரு   ஆள்,  அங்குள்ளவர்கள்   அவரை    நன்கு    அறிவர்   என்றாரவர்.

அப்படியிருக்க    பிஎன்னுக்கு   நன்றிக்கடன்   பட்டிருப்பதை     குவாக்  மறந்துவிடக்கூடாது    என்று   அம்னோ    உச்சமன்ற   உறுப்பினர்    தாஜுடின்  அப்துல்   ரஹ்மான்   கூறியது   ஏன்  என்பது   தமக்குத்    தெரியவில்லை   என  ஷாரிர்   கூறினார்.

“நடந்து   என்னவென்பது   சரியாகத்   தெரியவில்லை.  குவாக்கின்  வாழ்க்கை  நினைவுக்  குறிப்புகளை   நான்  படிக்கவில்லை…..தாஜுடின்    குவாக்கை  நோக்கி    ‘தோலை  மறந்த  வேர்க்கடலை   போல்’ (நன்றி  மறந்துவராய்)  ஆகிவிடக்கூடாது  என்று    ஏன்  சொன்னார்   என்பது  எனக்குத்  தெரியாது”,  என்றார்.

மசீச  துணைத்   தலைவர்   வீ  கா   சியோங்,  குவாக்குக்கு   எதிராகக்  குற்றம்  சுமத்திய   மலேசியா  டுடே   நம்பத்தக்க   வலைத்தளம்   அல்ல    என்றார்.

“அது  ஒரு  கட்டுக்கதை.   அதற்கு  ஆதாரமில்லை. அது   நம்பத்தக்க  செய்தி   அல்ல”,  என்று  சொன்னார்.

மெஞ்செஸ்டரில்   தங்கியுள்ள   ராஜா   பெட்ரா   கமருடின்    அவருடைய  வலைத்தளமான   மலேசியா  டுடே-இல்   அண்மையில்   வெளியிட்ட  சில   கட்டுரைகளில்   குவாக்   அம்னோவைக்   கவிழ்க்கும்  முயற்சியாக    டிஏபி-க்கும்   மலேசிய  இன்சைட்டுக்கும்   பண  உதவி   செய்வதாகக்  குற்றம்  சாட்டியிருந்தார்.

குவாக்   அவரின்  உறவினர்   ஜேம்ஸ்   குவாக்கை  அவரின்   தொடர்பாளராக  அமர்த்திக்  கொண்டிருப்பதாகவும்   கூறி  ஜேம்ஸ்  பல  டிஏபி   தலைவர்களைச்   சந்திக்கும்  படங்களையும்    வெளியிட்டிருந்தார்.