பெப்ரவரி 28 – நஜிப்பின் கோட்டையில் மகாதிர்!

 

பிரதமர் நஜிப் ஓர் ஊழல் பேர்வழி, நாட்டின் கஜனாவை காலி செய்தவர். அவரை மக்கள் ஆதரிக்கக்கூடாது என்று நாடு தழுவிய அளவில் பயணம் மேற்கொண்டு, பேசி வரும் முன்னாள் பிரதமர் மகாதிர், எதிரியின் கோட்டைக்கே செல்கிறார்.

எதிர்வரும் புதன்கிழமை (பெப்ரவரி 28), 93 வயதான பாக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் பிரதமர் நஜிப்பின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கானில் மக்களைச் சந்திப்பதுடன் உரையும் நிகழ்த்தப் போகிறார்.

தொடர்பு கொண்ட போது, பகாங் ஹரப்பான் தலைவர் பௌஸி அப்துல் ரஹ்மான் பெப்ரவரி 28 மதியத்தில் மகாதிர் சினி பகுதிக்கு வருகிறார் என்பதை உறுதிப்படுத்தினார்.

சினி பெல்டா குடியேற்றக்காரர்கள் மகாதிரை அங்கு பேச வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று பௌஸி தெரிவித்தார்.

பிற்பகல் மணி 3 அளவில், மகாதிர் அந்த ஓரங் அஸ்லி குடியிருப்பு பகுதியைச் சுற்றிப் பார்க்கிறார். அன்றிரவு மகாதிரும் தானும் (பௌஸியும்) ஒரு செராமாவில் பேசப் போவதாகவும் பௌஸி கூறினார்.

அன்றிரவு நடைபெறும் நிகழ்ச்சியில், ஹரப்பான் தலைவர்கள் ஹம்ஷா ஜாப்பார் (பகாங் அமனா), லியோங் இங்கா இங்கா (டிஎபி), வான் முகமட் ஷாரீர் வான் அப்துல் ஜாலில் (பகாங் பெர்சத்து) மற்றும் தேசிய பெல்டா குடியிருப்பாளர்களின் குழந்தைகள் மன்றம் (அனாக்) தலைவர் மஸ்லான் அலிமான் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

நஜிப்பின் தந்தை அப்துல் ரசாக் ஹூசேன் காலமான பின்னர், நஜிப் இத்தொகுதியை 1976 இல் போட்டியின்றி வென்றார். அது இன்னும் அவர் கையில்தான் இருக்கிறது.

ஆனால், 1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நஜிப் வெறும் 241 வாக்குகள் பெரும்பான்மையில்தான் வெற்றி பெற்றார்.

பெர்சத்து மற்றும் ஹரப்பான் ஆகியவற்றின் தலைவர் என்ற முறையில் பெக்கானுக்கு மகாதிர் மேற்கொள்ளும் முதல் வருகை இது.