குவோக், ஆண்மையற்றவராக இருக்காதீர், பொதுத் தேர்தலில் போட்டியிட வாரும், நஸ்ரி சவால்

 

கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை சீண்டும் மிக அண்மைய அம்னோக்காரராக கிளம்பியிருக்கிறார் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ்.

ஹோங்காங்கில் வசித்து வரும் “சீனி மன்னன்” ரோபர்ட் ஹுவோக், 94, மலேசியாவுக்குத் திரும்பி வந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மலேசியகினியிடம் பேசிய நஸ்ரி கூறினார்.

“‘போண்டான்’ (பெண் தன்மையுடையவர்) ஆக இருக்காதிர். ஹாங்கான் சுவற்றின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பெட்டைக் கோழியாக இருக்காதீர்”, என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரான நஸ்ரி மேலும் கூறினார்.

முன்னதாக அவரது நாடாளுமன்ற தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி, “விதையற்ற ஒரு கோழை” என்று குவோக்கை தாக்கினார்.

குவோக் ஓர் ஆணவம் பிடித்தவர். வெளிநாட்டில் ஒளிந்துகொண்டு டிஎபிக்கு நிதி அளிக்கிறார் என்று நஸ்ரி கூறியதாக சைனா பிரஸ் செய்தி கூறுகிறது.

மேலும், “குவோக், நாங்கள் உம்முடன் போரிடுவோம். நீர் பணக்காரர் என்று எண்ணாதீர்”, என்று அவர் கூறியதாக சைனா பிரஸ் செய்தி கூறுகிறது.

“நீர் பணக்காரர் என்று கருதினால், அரசியலில் இறங்க வேண்டும். கோழையாக ஒளிந்துகொண்டு (வெளிநாட்டில்) இருக்காதீர், டிஎபிக்கு நிதி அளித்து பிஎன்னை கவிழச் செய்ய. உமது சவாலை பிஎன் ஏற்றுக்கொள்கிறது.

குவோக் அவர் விரும்பிய கட்சிக்கு நிதி உதவி அளிப்பது அவரது உரிமை, அது சட்டத்திற்கு எதிரானதல்ல. ஆனால், அந்த கோடீஸ்வரர் பிஎன் அரசாங்க உதவியினால்தான் வெற்றி பெற்றார் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார் நஸ்ரி.

குவோக்கை போல் பெரும் பணக்காரர்களாக இல்லாவிட்டாலும் ஏராளமான சீனர்கள் மலேசியாவில் இன்னும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு, மற்ற இனத்தவர்களுடன் இணைந்து நாட்டை மேம்படுத்துகிறார்கள் என்று கூறிய நஸ்ரி, குவோக்கை போன்றவர்கள் அவர்களுடைய குடியுரிமையை துறந்துவிட வேண்டும் என்றார்.

குவோக்கிடமிருந்து டிஎபி நிதி உதவி பெற்றது என்று கூறப்படுவதை அக்கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மறுத்துள்ளார்.