மலேசிய சட்டவிரோத தொழிலாளர்கள் 200 பேரை, நியூசிலாந்து வெளியேற்றியது

மலேசியா, சட்டவிரோதத் தொழிலாளர்களைக் கைதுசெய்துவரும் வேளையில், நம் மக்களில் அதிகமானோர் சட்ட விரோதமாக நியூசிலாந்தில் வேலை செய்துவருவது தெரியவந்துள்ளது.

கடந்த 6 மாதங்களில், சுமார் 200 மலேசிய சட்டவிரோத கட்டுமானத் தொழிலாளர்களை நாடுகடத்தியதாக அல்லது அந்நாட்டில் நுழைவதிலிருந்து தடுத்துள்ளதாக, நியூசிலாந்து குடிநுழைவுத்துறை கடந்த வாரம் அறிவித்தனர்.

அவர்களில் சுமார் 105 பேர், ஏறத்தாழ 5 ஆண்டுகளாகவும், ஒருவர் 20 ஆண்டுகளாகவும் நியூசிலாந்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர், மேலும் 85 பேர் அந்நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

கடந்தாண்டு மே மாதத்தில், அந்நாட்டு அரசாங்கம் தொடக்கிய ‘ஓப்பராசி ஸ்பெக்ட்ரம்’ எனும் விசாரணை நடவடிக்கையின் போது இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மூன்றாம் நிலை துணைக் குத்தகையாளர்களால் இவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டதால், மேம்பாட்டாளர்கள் மற்றும் கட்டுமான தளங்களின் மேலாளர்களுக்கு இவர்கள் வேலையில் இருப்பது தெரிவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.