சமயத்தைவிட்டு வெளியேறும் வழக்குகளை சிவில் நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாத்தைவிட்டு  வெளியேற  விரும்பும்   நால்வர்   அதற்காக   சிவில்  நீதிமன்றங்களில்  வழக்கு   தொடர  முடியாது  எனக்  கூட்டரசு   நீதிமன்றம்  கூச்சிங்கில்   தீர்ப்பளித்தது.

சமயத்தை விட்டு  விலகும்  விவகாரங்களில்   முடிவு   செய்யும்   அதிகாரம்   சிவில்  நீதிமன்றங்களுக்கு  இல்லை   எனக்  கூட்டரசு   நீதிமன்றத்தின்  ஐவரடங்கிய  நீதிபதிகள்   குழு   ஏகமனதாக  தீர்ப்பளித்துள்ளதாக   போர்னியோ   போஸ்ட்   கூறுகிறது.

2001, ஷியாரியா   நீதிமன்றச்   சட்டங்களில்   சமயத்தை விட்டு  விலகும்  விவகாரம்  குறித்து  விசாரிக்கும்   அதிகாரம்  இருப்பதாக   குறிப்பு   ஏதுமில்லை   என்பதால்   சரவாக்  ஷியாரியா  நிதிமன்றம்   அது   சம்பந்தமான   வழக்கை  விசாரிக்க  முடியுமா   என்பதன்மீது   தீர்ப்பளிக்க  வேண்டுமாய்  கூட்டரசு  நீதிமன்றம்  கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஷியாரியா  நீதிமன்றச்   சட்டத்தில்   அதற்கான   சட்ட  விதிகள்  இல்லை  என்றாலும்  2001  மஜ்லிஸ்  இஸ்லாம்  சரவாக்   சட்டவிதிகளில்   அதற்கான    வகைமுறைகள்  இருக்கின்றன  என்றும்   அவற்றை  ஷியாரியா   நீதிமன்றங்கள்  பயன்படுத்திக்  கொள்ளலாம்    என்றும்    முறையீட்டு   நீதிமன்றத்  தலைவர்  சுல்கிப்ளி  மகினுடின்   கூறினார்.

நீதிபதிகள்  குழுவில்  சுல்கிப்ளியுடன்   மலாயா  தலைமை   நீதிபதி  நீதிபதி   அஹ்மட்  மாரூப்,  நீதிபதிகள்  ஹசன் அலா,  ஜெப்ரி  டான்,  ரம்லி  அலி  ஆகியோர்  இடம்பெற்றிருந்தனர்.

நான்கு  மனுதாரர்களும்   அவர்களின்   வழக்கு   2015-இல்  உயர்   நீதிமன்றத்திலும்  2016-இல்  முறையீட்டு   நீதிமன்றத்திலும்   நிராகரிக்கப்பட்டதைத்   தொடர்ந்து   கூட்டரசு   நீதிமன்றத்தை  நாடினர்.