பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நெடுஞ்சாலை டோல் கட்டணங்களுக்கு எதிராக பேசுவது ஒரு தேர்தல் தந்திரம் என்கிறார் பிகேஆர் தகவல் தலைவர் சைட் இப்ராகிம் சைட் நோ.
“நஜிப் பேசுவது கேட்பதற்கு இனிக்கிறது. ஆனால், எல்லாமே தேர்தல் பேச்சு.
“பிஎன் டோலை ஒரு கருவியாக பயன்படுத்துவதைத் தடுக்க ஒரே வழிதான் உண்டு. அதுதான் 14அவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரபானை ஆட்சியில் அமர்த்துவது”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
2009-இலிருந்து நஜிப்தான் பிரதமராக இருக்கிறார். அவரது நிர்வாகத்தில்தான் 2015-இல் 18 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 20 சென்னிலிருந்து ரிம2.30 வரை உயர்த்தப்பட்டது.
நஜிப் அரசாங்கத்தில்தான் சுங்கை பீசி- உலு கிளாங் விரைவுச் சாலை (எஸ்யுகேஇ), டமன்சாரா- ஷா ஆலம் விரைவுச் சாலை(டேஷ்), கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலை (இகேவிஇ), மேற்குக் கரை விரைவுச் சாலை, சித்தியா வங்சா- பந்தாய் விரைவுச் சாலை(எஸ்பிஇ) ஆகிய டோலுடன் கூடிய ஐந்து புதிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டன.
“2009-இலிருந்து நஜிப்தானே பிரதமராக இருக்கிறார். ஏன் நெடுஞ்சாலைக் கட்டணங்களைத் திருத்தவில்லை, குறைக்கவில்லை”, என இப்ராகிம் வினவினார்.