சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக்கை விமர்சித்துத் தள்ளியதை இன்னொரு கோடீஸ்வரர் கண்டித்திருக்கிறார்.
ஒரு திறந்த மடல் வரைந்த கண்டரி ஹைட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனரும் அதில் பெரும்பான்மை பங்கு வைத்திருப்பவருமான லீ கிம் இயு, அம்னோவின் மூத்த தலைவர் மிகவும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டிருப்பதாக சாடினார்.
நஸ்ரியின் மரியாதைக்குறைவுதான் தம்மை இப்படி ஒரு மடலை எழுதத் தூண்டியது என்றாரவர். அக்கடிதம் சீனமும் சிறிதளவு ஆங்கிலமும் கலந்து எழுதப்பட்டிருந்ந்தது.
“நான் இந்தத் திறந்த மடலை எழுதுவதன் நோக்கம், ஓர் அமைச்சரான நீங்கள் மிகவும் கெளரவக்குறைவாக நடந்து கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
“YB tidak YB, tapi kasar, banyak kasar (மாண்புமிகு எம்பி-இடம் மாண்பில்லை) மிகவும் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டிருக்கிறீர்கள்”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் என்ற முறையில் நஸ்ரிக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் கொடுக்கப்படுகிறது. போக்குவரத்து படி, உதவியாளர்கள், அரசாங்க நிதியுதவி இப்படி பல சலுகைகளை அனுபவிக்கிறார்.
“அப்பணத்தில் ஒரு சிறு பகுதியாவது குவாக் குழுமத்திடமிருந்து வந்திருக்கும்”, என்றவர் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு நெருக்கமானவராக அறியப்படும் லீ, நஸ்ரியும் மற்ற அம்னோ தலைவர்களும் மலேசியா அவர்களுக்கே சொந்தமானதுபோல் நினைத்துக்கொள்ளக் கூடாது என்றார்.
“நீங்கள் (அமைச்சராக) மூலதனமே இல்லாத ஒரு தொழிலை பல தவணைகள் அனுபவித்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.
“பெற்றதற்கு இணையாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்கள். ஜனநாயகம் என்றால் என்ன வென்பதை மறந்து நாடே கட்சிக்குச் சொந்தம் என்பதுபோல் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்”, என்றாரவர்.
நேற்று நஸ்ரி ஹாங்காங்கைத் தளமாகக் கொண்டு செயல்படும் குவாக்மீது மிக மோசமாக வசைபாடினார். மலேசியா திரும்பி பொதுதேர்தலில் போட்டியிடும் துணிச்சல் உண்டா என்று சவால் விடுத்தார்.
அவரை ஒரு “பொண்டான்” என்றும் ”விரையில்லாத கோழை” என்றும் சாடினார்.
நஸ்ரி ஆத்திரம் கொண்டு ஆர்ப்பரிக்க காரணம், ராஜா பெட்ரா கமருடின் அவரது வலைத்தளத்தில் தேர்தலில் அம்னோ/பின்னைக் கவிழ்க்க குவாக் டிஏபிக்குப் பண உதவி செய்கிறார் என்று கூறியிருந்ததுதான்.
அதை குவாக்கும் மறுத்தார். டிஏபியும் மறுத்தது.
அமைச்சர்கள் எதை பேசவேண்டும்,பேசக்கூடாது என்பதை அறிந்திருப்பது நல்லது.