எனது காலத்தில் குவோக் பிஎன்னுக்கு நிதி கொடுத்ததே இல்லை, மகாதிர்

 

1957 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பின்னர், அம்னோவுக்கும் மசீசவுக்கும் கணிசமான நிதி பங்களிப்புச் செய்யும்படி தாம் அடிக்கடி கேட்டுக்கொள்ளப்பட்டதாக கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் கூறியிருந்தார்.

ஆனால், தாம் பிரதமராக இருந்த 22 ஆண்டுகாலத்தில் குவோக் பிஎன் கட்சிகளுக்கு நிதி அளித்ததில்லை என்று மகாதிர் கூறிக்கொண்டார்.

அப்படி எதுவும் இல்லை என்று பெட்டாவிங் ஜெயாவில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் கூறினார்.

நிதி உதவி அளித்த சிலர் இருக்கிறார்கள். அது போதுமானது என்று அவர் மேலும் கூறினார்.

இப்போது பிரதமர் நஜிப் தலைமைத்துவத்துடன் ஒப்பிடுகையில் தமது காலத்தில் பிஎன்னுக்கு கணிசமான நிதி தேவைப்படவில்லை. அதனால், ரோபெர்ட் குவோக் எங்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றார் மகாதிர்.

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக குவோக் டிஎபிக்கு நிதி உதவி அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டு அவதூறானது என்று மகாதிர் வர்ணித்தார்.

ரோபெர்ட் குவோக்கிடமிருந்து எதுவுமே, சல்லிக்காசுகூட, பெறவில்லை என்று டிஎபி தம்மிடம் கூறியுள்ளது என்று தெரிவித்த மகாதிர், இது குவோக்குக்கு எதிரான அவதூறு. அவர் மலேசியாவிலிருந்து வந்த மிகப் பெரும் பணக்காரர். அவர் இந்த நாட்டை நேசிக்கிறார் என்பது அவரது நிலைப்பாடு. அது எங்களுக்குத் தெரியும் என்று மகாதிர் மேலும் கூறினார்.

பிஎன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அல்லது செய்தித்தளம் த மலேசியா இன்சைட் ஆகியவற்றுக்கு தாம் நிதி உதவி அளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை தமது அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குவோக் மறுத்துள்ளார்.