மகாதீர் : முக்ரிஸை நான் பிரதமராக்க முயற்சித்ததில்லை

தன் மகன் முக்ரிஸை,  தனது அடிச்சுவடுகளைப் பின்பற்றி பிரதமராக்க வேண்டும் என தான் முயற்சித்ததில்லை என்று, டாக்டர் மகாதீர் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் டிஏபி தலைவர், துங்கு அஸிஸ் துங்கு இப்ராஹிமுக்கு எதிரான முக்ரிஸின் அவதூறு வழக்கில், இன்று நீதிமன்றத்தில் சாட்சியளிக்க வந்த அந்த முன்னாள் பிரதமர், அப்படியொரு விருப்பம் இருந்திருந்தால், அவரது 22 ஆண்டுகால ஆட்சியின் போதே அதனைச் செய்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

“நான் பிரதமாராக இருந்தபோது, முக்ரிஸ் தனது 30-களில் இருந்தார். நான் விரும்பியிருந்தால், எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது அரசியல் வாழ்க்கையைப் பிரகாசமாக்கியிருக்க முடியும்,” என முக்கிரிஸின் இரண்டாவது சாட்சியான மகாதிர் கூறினார்.

பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான முக்ரிஸ், கடந்தாண்டு துங்கு அஸிஸ் வெளியிட்ட இரண்டு பத்திரிக்கை அறிக்கைகள் தொடர்பில், அவர் மீது வழக்குப் பதிவு செய்தார். முன்னாள் டிஏபி தலைவரான துங்கு அஸிஸ், முக்ரிஸை பிரதமராகவும் லிம் கிட் சியாங்கை துணைப் பிரதமராகவும் நியமிக்க ஓர் ‘இரகசிய உடன்பாடு’ நடப்பதாக தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருந்தார்.

முக்ரிஸ் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு கோருவதோடு, துங்கு அஸிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

தான் பிரதமர் பதவியிலிருந்து விலகியப் பின்னரே முக்ரிஸ் அம்னோவில் இணைந்ததாக மகாதீர் மேலும் கூறினார்.

தனது பிரதமர் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக, பிறர் குற்றம் சாட்ட விரும்பாததால், அவரது பிள்ளைகள் அரசியலில் சேர்வதை அவர் கடுமையாக எதிர்த்ததாகவும் மகாதீர் கூறினார்.

“எனவே, துங்கு அஸிஸ் கூறுவதில் உண்மை இல்லை,” என மகாதீர் கூறினார்.